அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தேகை - 12 arrow படித்துச் சுவைத்த புனைகதை
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


படித்துச் சுவைத்த புனைகதை   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: நிலக்கிளி. à®…. பாலமனோகரன்  
Tuesday, 14 December 2004

'அதியுயர்ந்த இன்பம் எப்போது ஏற்படும்?"
'சிறந்த கதையொன்றைக் கேட்கும்போது!"

கேட்பது சாயிரா என்னும் இஸ்லாமியச் சிறுமி. பதில் சொல்வது ஆஞ்சநேயர்! இந்தப் பதிலை அங்கு கண்ணுக்குத் தெரியாது பிரசன்னமாயிருக்கும் இயமனும்; விநாயகரும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இது ஏதோ புராணக்கதையில் வரும் சம்பவமல்ல. ''Red Earth And The Pouring Rain"  என்ற தலைப்புடன்  1995ல் பிரித்தானியாவில் ஒரு ஆங்கிலப் புனைகதையொன்று வெளிவந்துள்ளது. இதை எழுதியவர் விக்ரம் சந்தர என்ற வட இந்தியர். 'செம்பாட்டு மண்ணும் கொட்டும் மழையும்" என நான் அதை மனதுக்குள் தமிழாக்கிக் கொண்டேன்.

இன்றைய இந்தியாவில் நிகழும் ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு புராதன இந்துஸ்தான் வரையில் தனது கற்பனையை விரிக்கும் இந்த எழுத்தாளர் தனது கதையின பெயரை ஒரு சங்ககாலப் பாடலில் கடன் வாங்கிக் கொண்டிருக்கின்றார்! செம்புலப்பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்ற குறுந்தொகைப் பாடலை இயற்றியோன் யாரெனத் தெரியாத காரணத்தால் அவருக்கு 'செம்புலப்பெயல் நீரனார்" என்றே பெயரிட்டு மகிழ்ந்திருக்கின்றனர் எம் முன்னோர்.

இக் கதையில் இப்பாடல் பற்றிய செய்தியை ஒரு பொதுமகள் பின்வருமாறு கூறுகின்றாள் - 'எனக்கொரு சினேகிதி இருக்கின்றாள். அவள் சிறுமியாக இருக்கும்போதே இங்கு கொண்டு வரப்பட்டவள். தெற்கே வெகு தொலைவில் உள்ள அவளுடைய வீட்டு ஞாபகமாக இப்போ அவளிடம் உள்ளது இந்த ஒரு பாடல்தான்! இதை அவள் சிலசமயங்களில் பாடுவாள். இது என்ன பாடல்? இதன் அர்த்தம் என்ன? யாருடைய பாடல் இது? என்றெல்லாம் கேட்பேன். ஆனால் அவளோ 'சகோதரி! இதை ஆக்கியவர் யாரென எனக்குத் தெரியாது. ஆனால் இதன் அர்த்தம் இதுதான்.... என் தாய் உனக்கு என்ன முறை? என் தந்தைதான் உனக்கு எவ்வகையில் உறவு? நானும் நீயும் எப்படித்தான் சந்தித்தோம்? ஆனால் நமது நெஞ்சங்கள் செம்புலப்பெயல் நீர்போலக் கலந்துவிட்டனவே! குழந்தைகளே! இங்கு நடப்பது இதுதான்!" எனச் சொல்கின்றாள்.

ஒரு கதையில் ஆரம்பித்து அதற்குள் பலநூறு கதைகளை உருவாக்கி அவற்றுக்குச் சிந்துநதிக்கரைக் காலத்திலிருந்து இன்றுவரை களம் அமைத்து கதாபாத்திரங்களை உயிர்த்துடிப்புடன் உலவவிட்டுப் படைக்கப்பட்ட இக் கதையை ஒரு அற்புதக் காவியமென்றுகூடச் சொல்லலாம். வரிக்குவரி விறுவிறுப்பும் சுவையும் கொண்ட இக்கதை அதே சமயம் எமக்கு அறியத்தரும் விஷயங்கள் எமது சிந்தனைக்கு விருந்தாகவும் வித்தாகவும் அமைகின்றன.

உதாரணமாக ஆதிகாலத்தில் நடந்தவைபற்றி இன்று நிலவும் கதைகள் எவ்வளவுக்கு உண்மையானவை? எவ்வளவுக்கு அவற்றில் கற்பனை காலங்காலமாகக் கலந்து வந்துள்ளது என்பதையிட்டு ஆசிரியர் பின்வருமாறு கூறுகின்றார்.

'உண்மையில் என்னதான் நடந்தது எனச் சிலவேளை யாரேனும் கேட்டால்......... உண்மையில் நடந்தது இதுதான்! கடந்தகாலம் புனரமைக்கப்பட்டது. என்றென்றும் எம்மைத் தொடர்ந்துவந்து எம்முடன் வாசம் செய்யும் விஷயங்கள் முன்னொருகாலம் நடந்திருக்கக்கூடிய வகையில் மீளாக்கம் செய்யப்பட்டன."

மீண்டும் பிறிதொரு இடத்தில் 'ஒருவேளை உண்மையில் என்னதான் நடந்தது என யாராவது கேட்டால் .... காலதேவன் எம் மத்தியில் எமது நகரங்கள் கிராமங்கள் வயல்கள் எங்குமே உலவுகின்றான். அவன் பொறுமை மிக்கவனாய் எவருமே அறியாது தனது சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்து ஈற்றில் எப்போதுமே வெற்றியீட்டுகின்றான். இறுதியில் அவன் வெல்கையில் பெயர்கள் மட்டுமே தொலைந்து போகின்றன. அவை காய்ந்து கோதுகளாய்ச் சிதைந்து மண்ணோடு மண்ணாக மக்கிப் போகின்றன. ஆனால் வேறு ஏதோவொன்று எஞ்சி நிற்கின்றது. அது தொடர்ந்தும் வாழ்கின்றது தியானிக்கின்றது நடனமிடுகின்றது உலவுகின்றது! காலச்சக்கரம் இவ்வழி உருளும் எனச் சொல்லப்படக்கூடும் ...... காலதேவனால் அழிக்கமுடியாத காரியங்களும் உண்டு எனச் சொல்லப்படக்கூடும்!" என்கின்றார்.

இக் கதையில் இன்றைய சாதாரண மனிதர்கள் மட்டுமல்லாது அனுமாரும் இயமனும் விநாயகரும் பாத்திரங்களாகின்றனர். மரணப் படுக்கையில் இருக்கும் குரங்கொன்று தனது முற் பிறவிபற்றிக் கூறுகின்றது. தனது உயிரை இயமன் கவர வரும்போது அது அனுமாரிடம் அடைக்கலம் கோருகின்றது. நிறுத்தாமற் கதை சொல்லிக்கொண்டே போனால் அதுவரை உயிரை எடுப்பதில்லை என ஒப்பந்தம் பேசப்பட்டு அதன்வழி கதை கொடிவிட்டுப் படர்ந்து கிளைபல பரப்பி பல நூறு கதைகளைப் பூக்கின்றது.

எத்தனையோ சிறந்த சிந்தனைக் கருக்களை முன்வைக்கும் இக்கதை கவிஞர்களுக்கு உள்ள கடமைபற்றிக் கூறும் கருத்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

மரணிக்கும் தறுவாயில் சிக்கந்தர் சஞ்சயைப் பார்த்துக் கூறுகின்றான்.. 'நான் உன்னை ஏமாற்றிவிட்டேன் என நீ சொல்கின்றாய். ஆனால் நானோ ஒரு இராஜபுத்திரன். நான் என்றுமே சாவைக் கண்டு அஞ்சியதில்லை. எம்மில் எவருமே மரணத்துக்குப் பயந்ததில்லை. நாம் அதைப் பார்த்து நகைத்தோம். ஆனால் நீயோ கவிஞனாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. நீ மட்டும் எப்படி என வழி காட்டியிருந்தால் நான் ஓர் அரசனாக ஆகியிருப்பேன். அல்லது வேறு ஏதோவாக ஆகியிருப்பேன். நீதான் எம்மை ஏமாற்றிவிட்டாய்! நீ எதிர்பார்க்கப்பட்டவாறு உருவாகாமல் வேறு ஏதோவொன்று ஆகி உன்னை நீயே ஏமாற்றிக் கொண்டாய்!"

ஆசிரியர் சொல்வதுபோல் காலங்காலமாகää சொல்லைப் பிரயோகிக்கும் கவிஞனே செயல்வீரர்க்கு வழிகாட்டி வந்திருக்கின்றான். இதன் பெறுபேறாகவே மனித சமுதாயம் இன்பம் துன்பம் இரண்டையுமே அனுபவித்திருக்கின்றது.

இன்றைய நாளிற்கூட இந்த உண்மை பொருத்தமானதே! இன்றைய கவிஞர்களும் எழுத்தாளர்களும் சொல்லாளர்களும் தாம் காட்டும் வழி சரியானதுதானா என்பதைச் சுய சத்தியசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியம்.

சந்தேகத்துக்குரியதும் மனிதநேயம் அற்றதுமான வழியைத்தான் நாம் காட்டி நிற்கின்றோமேயானால் நாம் இதைவிட்டு வாய்மூடிக் கல்லாகக் கிடந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்குமே என எதிர்காலச் சமூகம் எண்ணாமலிருப்பது அவசியமல்லவா?

ஆதாரநூல் - Red Earth And The Pouring Rain
                   - by Vikram Chandra.
                   Publishers: Faber and Faber Ltd
.


 Vikram Chandra.


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 29 Mar 2024 11:21
TamilNet
HASH(0x557291c11858)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 29 Mar 2024 11:21


புதினம்
Fri, 29 Mar 2024 11:21
















     இதுவரை:  24716252 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4165 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com