அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 22 arrow கலாயோகி ஆனந்த குமாரசாமி
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கலாயோகி ஆனந்த குமாரசாமி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.à®….சச்சிதானந்தன்.  
Saturday, 05 November 2005

ஆனந்த குமாரசாமிAnanda Kentish Coomaraswamy (1877-1947)

1.
ஆனந்த குமாரசாமி 22-08-1877ல் இலங்கையில் பிறந்தார். இவர் தந்தையார் முத்துகுமாரசாமி (Sir Muthu Coomaraswamy).  தாயார் ஆங்கிலேயப் பெண்மணி எலிசபெத் பீபீயாவார் (Elizabeth Clay Beeby). ஆனந்த குமாரசாமிக்கு இரண்டு வயதாக இருக்கும்போது தாயார் இங்கிலாந்துக்கு போனார். அப்போது முத்துக்குமாரசாமி இலங்கையில் காலமாகிவிட்டதால் எலிசபெத் இங்கிலாந்திலேயே தங்கிவிட்டார். தன் கணவன் காலமானபின், மறுமணம் செய்துகொள்ளாமல் ஆனந்த குமாரசாமியைப் படிக்க வைப்பதிலும் வளர்ப்பதிலும் தன் வாழ்வைச் செலவழித்தார். இவர் செல்வமிக்க குடும்பத்தைச் சார்ந்தவராதலால் பொருளாதாரப் பிரச்சனை ஏற்படவில்லை.
ஆனந்த குமாரசாமியின் தந்தையார் முத்துக்குமாரசாமி இங்கிலாந்தில் சட்டக்கல்வி பயின்று பார் அட் லா பட்டம்பெற்ற முதல் ஆசியக்காரரென பெருமை பெற்றவர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் மேலவையின் -பிரபுக்கள் அவை- உறுப்பினரான முதல் ஆசியக்காரர் என்ற புகழையும் பெற்றவர்.
இவர் பன்மொழி அறிஞர். தமிழ், சிங்களம், பாளி, ஆங்கிலம் முதலிய மொழிகள் அறிந்தவர். இவர் அன்றைய பட்டத்தரசியான விக்டோரியாவின் முன்னிலையில் அரிச்சந்திர நாடகத்தை ஆங்கிலத்தில் மேடையேற்றினார். தமிழிலுள்ள தாயுமானவர் பாடல்கள் நூறைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டார். சமூகத்தொண்டுள்ளம் கொண்டு செயல்பட்ட இவர் இளம் வயதில் காலமானது பெரும் அவலமாகும்.
ஆனந்த குமாரசாமி இலண்டன் பல்கலைக்கழகத்தின் வைக்கிளிப் (Wycliffe) கல்லூரியில் படித்தவர். தாவரவியலையும், கனிமவியலையும் தன் விருப்பாடங்களாக எடுத்துக்கொண்டார். பள்ளியில் இலத்தீனும் கிரேக்கமும் கற்றுக்கொண்டார். பிற்காலத்தில் தத்துவம், சிற்பக்கலை, நாட்டியம் பேன்ற பல்துறைகளில் ஆழ்ந்த அறிவுபெற இம்மொழிகள் உதவியாக இருந்தன. பின்பு தமிழ், சமஸ்கிருதம், பாளி, பிரெஞ்சு, ஜேர்மன், ஐஸ்லாண்டிக் ஆகிய மொழிகளை நன்கு கற்றார். இங்கிலாந்தில் கனிமங்கள் பற்றி ஆய்வுசெய்து புதியதாக கண்டுபிடித்த கனிமத்திற்கு தோரியனைற் (thorianite) எனப் பெயரிட்டார். அதற்காக முனைவர் பட்டம் (D.Sc.) இலண்டன் பல்கலைகழகத்தால் அளிக்கப்பட்டது.
அவருக்கு இருபத்தொரு வயதாக இருக்கும்போது இலங்கை கனிமத்துறை இயக்குநர் (Director of the Minerological Survey of Ceylon ) பதவி அளிக்கப்பட்டது. அதனால் இங்கிலாந்திலிருந்து முதன்முதலாக தான் பிறந்த நாடான இலங்கைக்கு வந்து சேர்கின்றார். ஆனந்த குமாரசாமியை அவரது தாயார் குழந்தைபருவத்தில் இருந்து இந்துவாக வளர்த்தனால் இந்தியப் பண்பாட்டின், வாழ்வியல் விழுமியங்களின் விதை அவருடைய பிஞ்சு உள்ளத்தில் ஊன்றப்பட்டிருந்தது. அப்போதிருந்தே தன் தந்தை நாட்டின் மேல் அவருக்கு மோகம் ஏற்பட்டுவிட்டது.
இலங்கைக்கு வந்தபின்பு தனது பணி நிமித்தமாக பல இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவ்வேளையில் தொன்மைக்கால கோயில்களின், புத்தவிகாரங்களின் -(எடுத்துக்காட்டாக பொலநறுவா, அநுராதபுரம் போன்ற இடங்கள்)- கட்டிடங்களின் இடிபாடுகளை காண நேர்ந்தது. அத்துடன் மரபார்ந்த கண்டி நடனத்தையும் காண நேர்ந்தது.  ஏழை நெசவாளர்கள் நெய்த துணிகளின் நேர்த்தியையும், கலையழகையும் கண்டு வியப்புற்றார். மேலை நாகரிகம் சூறாவளியென கீழைநாடுகளின் கலைகளை பண்பாட்டை அழிப்பதாக அந்தக்காட்சிகள் ஆனந்தகுமாரசாமிக்கு உணர்த்தின.
அவரின் சிந்தனை மெல்ல மெல்ல மாறத்தொடங்கியது. தன்வாழ்க்கையின் இலட்சியம் என்ன? என்ற வினா அவரின் உள்ளத்தை அலைக்கழிக்கத் தொடங்கியது. அதன் விளைவாக இலங்கைச் சீர்திருத்த சங்கத்தை நிறுவினார். அது பல பொருள்களில் சொற்பொழிவுகள் ஆற்ற அவருக்கு மேடை அமைத்துத் தந்தது. அம்மேடைகளில் தம் நாட்டு மக்கள் ஆங்கில நாட்டு நாகரிகத்தில் மோகம் கொண்டு தம் மரபையும், பாரம்பரிய பண்பாட்டையும் உதாசீனப்படுத்துவதைச் சுட்டிக்காட்டி இடித்துரைத்தார். ஆசியக் கண்டத்தின் - கீழைநாட்டு பண்பாட்டிற்கு அடிப்படை இந்தியா என அறிவுபூர்வமாக தெரிந்துகொண்டார்.   இத்தொன்மை மிக்க இந்தியப்பண்பாட்டை உலகத்திற்கு குறிப்பாக மேலைநாட்டினர்க்கு எடுத்துச் சொல்வதே தன் வாழ்வின் இலட்சியம் எனத் துணிந்ததும் இலங்கையில் தாம் வகித்துவந்த இலங்கை கனிமத்துறை இயக்குநர் பதவியை உதறினார்.
இலங்கையில் இருக்கும்போதே இந்தியாவுக்கு பல தடவைகள் கலைப்பயணம் மேற்கொண்டார். அப்போது இந்தியாவில் மகாத்மாகாந்தியின் தலைமையில் சுதந்திரப்போராட்டம் தொடங்கப்பட்டிருந்தது. காந்தி சுதேசியம் பேசியது ஆனந்த குமாரசாமிக்கு ஏற்புடையதாக இருந்தது.
அவர் முதலாம் உலகப்போரை எதிர்த்ததால் இங்கிலாந்தில் இருந்து ஆனந்த குமாரசாமியின் சொத்துக்களை பிரிட்டன் அரசாங்கம் பறிமுதல் செய்தது. அவர் பிரிட்டனுக்குள் நுழைந்தால் கைதுசெய்யவும் ஆணையிட்டது. இந்தியாவில் தொடங்கப்பட்ட காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் இந்தியத்துறை தொடங்கவும் அதற்கு தான் தலைமைதாங்கி நடத்தவும் முயற்சி செய்தார். ஆனால் அவரின் முயற்சி ஈடேறவில்லை. அமெரிக்காவின் பொஸ்டன் நகரத்திலுள்ள அருங்காட்சியகத்திலிருந்து ஆனந்த குமாரசாமிக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்ற அவர் தான் அரும்பாடுபட்டு சேர்த்த சிற்பம், படிமங்கள், ஓவியங்களுடன் 1920ல் பொஸ்டன் நகரில் குடியேறினார். அங்கு தன் வாழ்நாள் இறுதிவரையான 1947 செப்டம்பர் வரை அங்கேயே வாழ்ந்தார். ஆனந்தகுமாரசாமி தன் சொந்த வாழ்க்கையைப்பற்றி எதையும் கூறமறத்துவிட்டார். 'என் சொந்த வாழ்க்கை முக்கியமானதல்ல நான் எழுதியவற்றைப் படியுங்கள்' என்பதே அவரது கூற்றாகும். எனவே அவரின் வாழ்க்கையைப் பற்றி ஓரளவுக்குத்தான் தெரியவருகின்றது.

ஆனந்த குமாரசாமி மற்றும் ஸ்ரெலா 1918

2.
ஆனந்த குமாரசாமி காலத்தில் வாழ்ந்து, அவருடன் கடிதத் தொடர்பு வைத்திருந்தவர்களில் துரைராஜசிங்கம் என்பவரும் ஒருவர்.  மலேசிய குடிமகனாக வாழ்ந்துவரும் இவர் ஒரு யாழ்ப்பாணத் தமிழர்.   ஆனந்த குமாரசாமி பற்றிய தகவல் சுரங்கமாக விளங்குமிவர் ஆனந்த குமாரசாமி பற்றி பத்து நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். எனக்கும் துரைராஜசிங்கம் அவர்களுக்குமிடையே 1978ம் ஆண்டிலிருந்து 1990ம் ஆண்டுவரையில் கடிதத் தொடர்பு இருந்தது. அவர் எனக்கு எழுதிய கடிதங்கள் நூறுக்கும் மேலாக இருக்கும். அத்துடன் ஆனந்த குமாரசாமியின் அரிய கட்டுரைகளை தட்டச்சசு செய்து அனுப்பியுள்ளார். ஆனந்த குமாரசாமியின் மேதமையையும் ஆளுமையையும் எனக்கு உணர்த்தியவர் மலேசிய துரைராஜசிங்கம்.
கடந்த பத்து ஆண்டுகளாக எழுதி அண்மையில் முடித்த 'ஆனந்த குமாரசாமியின் - வாழ்வும் சிந்தனையும்' என்ற நூலில் இருந்து இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறேன். எனது அந்த நூல் அச்சில் ஆயிரம் பக்கங்கள் வரும்.
ஆனந்த குமாரசாமி அரைநூற்றாண்டுக்காலம் எழுதி வந்தவர். அவரின் கட்டுரைகள் நூல்கள் மதிப்புரைகள் கடிதங்கள் அச்சேறினால் பல்லாயிரம் பக்கங்கள் வரும். இவர் இன்னும் புலமையாளகள் உலகில் பேசப்படுபவராக இருக்கிறார். இன்றைய தேதிவரையில் இணையத் தளங்களில் 94900 பதிவுகள் இருக்கின்றன.
அவர் வாழ்ந்த காலத்தை சிறிதளவு அறிந்துகொள்ள வேண்டும். சென்ற இருபதாம் நுற்றாண்டு முற்பகுதிவரையில் மேலை நாடுகளின் அரசியல் மேலாண்மையும், அதிகாரமும், கீழை உலகத்தை ஆட்டிப்படைத்தன. கீழைநாட்டின் தொன்மைப் பண்பாடும், பாரம்பரியமும் குறிப்பாக இந்தியக் கலைகளும் எள்ளி நகையாடப்பட்டன. அதுவும் மாபெரும் கலாவிற்பனர்கள் என்று அந்தக்காலத்தில் கொண்டாடப்பட்ட வின்செண்ட் சுமிதி, பிராவுட், மார்ஷல், ஆர்சர் ஆகியயோர் இந்தியக் கலைகளை புரிந்துகொள்ளாமலே எள்ளி நகையாடினர். அந்த காலகட்டத்தில் ஆனந்த குமாரசாமி தனது அபாரமான ஆழ்ந்த அறிவாலும், சொல்லாற்றலாலும் மேலைநாட்டு கலைத் திறனாய்வாளருக்கு இந்தியப் பண்பாட்டின் சிறப்புகளை எடுத்துரைத்தார். ஆசியக் கண்டத்தின் வாழ்வியல் அடிப்படையை இந்தியா உருவாக்கியது  என்ற உண்மையை நிறுவினார்.
அவர் எழுதியவற்றை மூன்று பெரும் பிரிவுகளாக வகுக்கலாம்.
முதல் பிரிவு: இந்தியக் கலைகள் பற்றிய அனைத்து தகவல்களும் காலவரிசைப்படி தருதல்.
இரண்டாம் பிரிவு: கலைகளின் அடிப்படைக் கோட்பாடுகள்-தத்துவ விளக்கங்கள். குறியீடு, அழகியல், கலைநுணுக்கம் ஆகியவற்றை ஆன்மீகத்துடன் இணைதது அதன் வெளிப்பாடே இந்தியக் கலை என்று விளக்கமா எடுத்துரைத்தல்.
முன்றாம் பிரிவு: ஆன்மீகம் பற்றியவைகள். அவை போதனைகளாக இல்லாமல் விளங்களாக எடுத்துரைத்தல்.
முதல்பிரிவு:
1.மத்தியகால சிங்களக் கலை (1908) mediaeval Sinhalese Art.
2.கலையும் சுதேசியமும்.(1911) Art and Swadeshi.
3.இந்தியா மற்றும் இலங்கை கலைகளும், கைவினைகளும். The Arts and Crafts of  India and Ceylon.
4.இந்தியக் கலைக்கு ஒர் அறிமுகம். An Introduction to Indian Art.
5.தொடக்ககால இந்தியக் கட்டிடக் கலைகள் பற்றிய கட்டுரைகள்.Essays in early Indian Architecture.
6.புத்த படிமக் கூறுகள்.(1935) Elements of
7.இராசபுதான ஓவியங்கள். Rajasthan Paintings

இரண்டாம் பிரிவு:
1.யக்ஷா(1928) Yakshas
2.சிவநந்த நடனம்.(1918) The Dance of Shiva
3.புத்தர் படிமத்தின் மூலம்.(1927) The origin of Buddhat image.
4.கலையில் இயற்கைத்த தன்மையின் மாற்றம்.(1934) The Transformation of Nature in Art.
5.கிறிஸ்தவ மற்றும் கீழைத்தேய கலையின் தத்துவம்.Christian and Oriental Philosophy of Art.
6.இநதிய மற்றும் இநதோனேசியன் கலை வரலாறு.(1927) History of Indian and Indonesian Art.

மூன்றாம் பிரிவு:
1.நாகரீகம் என்றால் என்ன? What is civilisation.
2.ஊழுழியும் காலமும். Time and Eternity.
3.இந்து சமயமும் பெளத்தமும்.(1943) Hinduism and Buddhism
4.வேதம் பற்றிய பார்வைகள்.Perspetive on the Vedas.
இவைதவிர மொழிபெயர்ப்பு நூல்களும் உள்ளன. பஞ்சாபிலிருந்து முப்பது பாடல்கள், வித்யாபதி, தேர்வு செய்ப்பட்ட 250 கடிதங்கள் இன்னும் பல நூல்கள்.
கட்டுரையின் நீளம் கருதி சில நூல்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.
அவரின் படைப்புகளை இருபது தொகுதிகளாக வெளிக்கொணரும் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இதுநாள்வரை பன்னிரெண்டு தொகுதிகள் வெளிவந்துள்ளன. அவருடைய எழுத்துக்கள் அனைத்தையும் தொகுத்தால் கிட்டத்தட்ட நாற்பது தொகுதிகள் வரும்.

3.
(என் நினைவிலிருந்து அவரின் சில மேற்கோள்களை இங்கு தருகிறேன்.)

'ஒரு நாடு கவிகளாலும் கலைஞர்களாலும்தான் உருவாக்கப்படுகின்றது.'

'மேலைநாட்டு சிற்பம் ஓவியம் இசை ஆகிய கலைகள் கலைஞனின் தனி்பட்ட ஆளுமையை அடிப்படையாக கொண்டவை. கீழைநாட்டின் கலைகள் மக்கள் சமூகத்தின் இனத்தின் விழுமியங்களை அடிப்படையாக கொண்டிருப்பதால் கலைஞனின் தனிப்பட்ட ஆளுமையின் வெளிப்பாட்டிற்கான இடம் அறவே கிடையாது. அவை புலன் கடந்தவைகளுக்கு குறியீடுகளாக சிம்பாலிக்காக திகழ்கின்றன. எனவே புகழ் பெற்ற கோயில்கள், கற்சிற்பங்கள், உலோகப்படிமங்கள் ஆகியவற்றை படைத்த கலைஞர்களின் பெயர்கள் தெரியப்படவில்லை.'

'இந்தியாவில் ஒரு பாட்டின், ஒரு ஓவியத்தின், ஒரு சிற்பத்தின் வோகள் சமூகத்தின் கற்பனையிலும் நம்பிக்கையிலும் இருக்கின்றன.'

'ஒரு புத்தர் சிலையை, ஒரு நடராசர் படிமத்தை எடுத்துக்கொள்வோம். அவை கலைஞனின் கற்பனையில் உருவெடுத்தவையா எனன்? புத்தர் தாமரையில் அமர்ந்திருக்கிறார். அந்த உருவத்திற்க பொருள் சொல்லுபவன் கலைஞன் அல்ல! சமூகம் - இனம்தான் வடிவத்தின் பொருளை தீர்மானிப்பது. நடராசர் சிலை இருப்பதைப் பாருங்கள். இந்த உருவத்தின் ஒவ்வொரு உறுப்பும் ஒன்றின் குறியீடாக இருப்பன. கடவுளின் ஐந்தொழிகளான படைத்தல், காத்தல், அருளல், மறைத்தல, அழித்தல் என்பவற்றின் தூல வடிவம்தான் அந்த ஆடல்வல்லான். ஒரு கையிலிருக்கும் மரு படைத்தலையும், இன்னொரு கையிலிருக்கும் எரிதழல் அழித்தலையும்,  தூக்கிய பாதம் முக்தியையும், அபயக்கை அருள் பாலிப்பதையும், ஆணவமாம் முயலகனின் மேல நிற்கும் பாதம் அகங்காரத்தை அழிப்பதையும் சுட்டி நிற்கிறது நடராச படிமம்.'

'குறியீடு, அழகு, ஒருமுகப்பட்ட மனம், கலைவெளிப்பாடு இவையாவும் ஆன்மீகம் இணைப்பதுதான் இந்தியக்கலை. குறியீடு ஏதோ சுட்டுபவைகளைக் கொண்ட அருங்காட்சியகம் அல்ல. ஆன்மீக மாற்றத்தை கொண்டுவரும் உயிர்த்துடிப்புள்ள சாதங்களவை.'

'நான் புதிய தத்துவத்தை  உருவாக்கவில்லை. ஏற்கனவே சொல்லப்பட்டதைத்தான் நான் எடுத்துச் சொல்கிறேன்.'

'உலகமனைத்திற்கும் - காலம், இடம் எல்லலைகளைக் கடந்து - பொதுவான தத்துவ மூலம் இருக்கின்றது. அது வற்றாத ஊற்று. அதிலிருந்துததான் எலலா காலத்தின் எல்லா நாட்டின் ஆன்மிகச் சிந்தனைகள்  வருவதை நான் எடுத்துச் சொல்கிறேன்.'

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)

 


 


மேலும் சில...
பிரெஞ்சு தீவு
ஒரு நாள் ஒரு கனவு…
நிர்வாண விழிகள்
வள அறிஞராக ஜீவா..
இடுக்குகளின் வழியே...
அம்மா எனக்கொரு சிநேகிதி.

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 29 Mar 2024 15:24
TamilNet
HASH(0x55a5f4e28fc8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 29 Mar 2024 15:24


புதினம்
Fri, 29 Mar 2024 15:24
















     இதுவரை:  24716718 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4138 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com