அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow வட்டம்பூ arrow வட்டம்பூ -7-8
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வட்டம்பூ -7-8   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Tuesday, 07 March 2006

 7.

சோனாதிராஜன் ஆண்டாங்குளத்தை விட்டுப்போய் நான்காம் நாள் இரவு சிங்கராயர் இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு நெடுங்காம்புச் சுருட்டைப் புகைத்துக் கொண்டிருந்தார். தேய்ந்து முக்கால்வாசியாக இருந்த நிலவு காலித்துக் கொண்டுவரும் வேளையில், ஆண்டாங்குளத்துக்குக் கிழக்கே பரவைக் கடலோரமாக அமைந்திருந்த திருக்கோணம் வயலில் எருமைகள் வெருண்டு கதறுகின்ற சத்தம் இலேசாகக் கேட்டது.

'மனுசி!... திருக்கோணம் வயலுக்கை எருமையள் கதறிக் கேக்குது!... நீ படு, நான் ஒருக்காப் பாத்துக்கொண்டு வாறன்" என்று சொல்லிவிட்டுக் கையில் துவக்கையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டார் சிங்கராயர்.

திருக்கோணம் வயலை நெருங்கியபோது இரண்டு எருமைகள் உக்கிரமாக மோதிக்ககொள்ளும் ஒலி கேட்டது. பட்டிநாம்பன் கேப்பையானை எதிர்த்துப் போட்டியிட இந்தப் பகுதியிலேயே ஒரு மாடு கிடையாதே என யோசித்துக் கொண்டே அவர் பலப்பரீட்சை நடந்துகொண்டிருந்த இடத்தை அடைந்தபோது, அங்கே நிலவில், பெருங்குன்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதுபோன்று, திம்திம்மென இரண்டு நாம்பன்கள் இடிபட்டன.

கொம்புடன் கொம்பு அடிபடுகையில் பொறி பறந்தது. சற்றுக் கிட்டப்போய் விரட்டுவோம் என எண்ணிக்கொண்டே நெருங்கிச் சென்றபோது, வெருண்டு சிதறி நின்ற  எருமைகள் அவரையும் கண்டு வெருண்டன.

அவற்றின் வெருட்சியைப் புதிய ஆபத்தின் சைகையாய் உணர்ந்த பழையாண்டாங்குளத்துக் கலட்டியன் கணப்பொழுதில் களத்தைவிட்டு ஓடிக் காட்டில் மறைந்ததைக் கண்டபோதுதான் சிங்கராயருக்கு உண்மை உறைத்தது.

அடடா! அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு விட்டோமே என எண்ணிய அவர், மிரண்டு கலைந்த எருமைகளை அமைதிப்படுத்துவதற்காக, ஒருவகை லயத்தில் 'அன்னம்!... ஆரிச்சி!... தாமரை, தம்பிராட்டி ... மாதாளை... ஓ... ஹோ...!" என்று நீட்டிக் குரல் கொடுக்கவும், எருமைகள் கொஞ்சம் கொஞ்சம் அமைதி அடைந்தவையாக ஒன்று சேரத்தொடங்கின.

கலட்டியனைக் காடுவரை சென்று துரத்திவிட்டுக் களைத்துப்போய் எருமைகளை நோக்கி வந்த கேப்பையான் அவர் அருகே வந்தபோது, தனது பட்டி நாம்பனின் வீரத்தை மனதுள் பாராட்டியவண்ணம் அதைத் தடவ முற்பட்டவரின் கண்களில் தென்பட்ட காட்சி அவரைக் கலங்க வைத்தது. ராசமாடு என்று அவர் பெருமையோடு பேசிக்கொள்ளும் அவருடைய பட்டிநாம்பன் கேப்பையானின் பருத்த, அழகிய, வளைந்த கொம்புகளில் ஒன்றைக் காணவில்லை. அது இருந்த இடத்தில் சதை பிய்ந்து, அடிக்காம்பு முறிந்து இரணமாக இருந்தது.

சிங்கராயரின் கண்களில் தீக்கனல் பறந்தது. 'என்ன கலட்டியன் புள்ளை என்ரை பட்டீக்கை வந்து மந்தை கலைக்கவோ?... கேப்பையான் மோனை!... நீ கவலைப்படாதே ராசா!... அடுத்த வெட்டுக் கட்டுக்கிடையிலை உந்தக் குழுவனை நான் புடிச்சுவந்து சிணுங்கிலை போட்டுப் பாவியாக்கி உன்ரை காலடியிலை கிடத்தாட்டி என்ரை பேர் சிங்கராசனில்லை!" என்று, கர்ஜிப்பதுபோன்று வஞ்சினம் மொழிந்தார் சிங்கராயர்.

திருக்கோணம் வயல்வெளி மூலையில் நின்ற செம்பு விளாத்தியில் தரித்திருந்த ஆந்தையொன்று சிங்கராயரின் கர்ஜனையைக் கேட்டுச் சடசடவென இறக்கைகளை அடித்துக் கொண்டு பறந்தது.


8.

 
முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி தியாகராஜ ஞாபகபர்த்த மண்டபத்தில் மாணவர் ஒன்றியக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. யாவருடைய அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான கே. பானுதேவன் ஆசிரியர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

மாநிறம், சுமாரான உயரம், ஒட்ட வெட்டிய அடர்த்தியான தலைமுடி, வெள்ளை உள்ளம் என்பவற்றைக் கொண்ட கே.பி உரை ஆற்றிக்கொண்டிருந்தார்.

'ஆரம்பத்திலே தண்ணீரிலேதான் உயிர் உருவாகியது. அது வளர்ந்து மாற்றமடைந்து தரைக்கு வர முயன்றது. இந்த மாற்றம் சில நூறு ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றமன்று. ஒவ்வொரு சிறு பரிணாம மாற்றமும் ஏற்படப் பல கோடி ஆண்டுகள் தேவைப்பட்டன. தண்ணீரிலே வாழ்ந்த உயிர் தரைக்கு வருவதென்றால் இலேசான காரியமா? சுவாசப் பைகளில் மாற்றம் தேவைப்பட்டது. தரையில் சஞ்சரிக்க அவயவங்கள் அவசியமாயிற்று. இவற்றை அடைவதற்கு இரத்தம் சிந்த வேண்டியிருந்தது. ஆனால், இந்த முன்னோக்கிய பயணம் இந்த இன்னல்களினால் தடைப்படவில்லை.

தரையில் வாழப் பழகிக்கொண்டவை மரங்களில் வாழவும், வானில் சஞ்சரிக்கவும், கூட்டாகச் சீவிக்கவும் பழகிக் கொண்டன. இப்படித் தோன்றிய மனிதன் ஆதியில் குகைகளில் வாழ்ந்தான். இறைச்சியையும், இலைகளையும், கிழங்கு கனி வகைகளையும் பச்சையாகவே உண்டான். பின்பு காட்டு விலங்குகளைப் பழக்கிப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டான். தானியங்களை உரிய பருவத்தில் விதைத்து விளைவிக்கவும் தெரிந்து கொண்டான். இப்படியே கோடானுகோடி ஆண்டுகளின் பின்னர் அவன் இன்றைய நாகரீகமடைந்த மனிதனாக மாறி வந்திருக்கின்றான்.

இன்று நாம் சர்வசாதாரணமாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு முதலியவற்றைச் சேர்த்துச் சுவையாக வெற்றிலை போட்டுக் கொள்கின்றோம். ஆனால், இந்தப் பொருட்களைச் சேர்த்து மென்றால் சுவை பிறக்கும், வாய் சிவக்கும் என்றெல்லாம் மனிதன் கண்டுபிடிக்க எத்தனை நூறு வருடங்கள் எடுத்ததோ யாருக்குத் தெரியும்? சொல்லப் போனால் இந்த வெற்றிலை போடுகின்ற விஷயங்கூட ஒரு மாபெரும் கண்டுபிடிப்புத்தான்!

இப்படியே ஒவ்வொரு துறையிலும் மாற்றமடைந்து, வளம்பெற்று சீர்திருத்தம் அடைந்த மனித இனம், இந்த நீண்டநெடும் பயணத்தில் சதா ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் உணரவேண்டும். முதன்முதலில் சுண்ணாம்பை அதிகம் சேர்த்துக் கொண்ட மனிதன் வாய்வெந்து மிகவும் அவதிப்பட்டிருப்பான். ஆனால் அவனுடைய அனுபவம், அடுத்தவன் அளவாகச் சுண்ணாம்பைப் பயன்படுத்தப் பாடமாயிருந்திருக்கும்.

இந்த நிமிடத்திலும் நமது கண்களுக்குப் புலப்படாமல் நடந்து கொண்டிருக்கும் இந்த நீண்ட பயணத்தின் கடந்தகாலப் பாடங்களை நீங்கள் இங்கே பாடசாலையில் மட்டுமல்ல, திறந்த பல்கலைக் கழகமாகிய அகன்ற உலகிலும் படிக்கலாம். இன்றைய இளஞ் சந்ததியினரான நீங்கள்தான் நாளை இந்த நெடும்பயணத்தின் வழிநடத்துனர்கள் - தலைவர்கள்! எனவே உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உன்னதமான பொறுப்பு உண்டென்று நீங்கள் உணர்ந்து கொள்;ளவேண்டும்.

உங்கள் கண்களை அகலத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்தியுங்கள். கொடுமைகளும், சுரண்டல்களும், வாழ்க்கையில் துன்பங்களும் ஏன் ஏற்படுகின்றன என்பதைத் தீவிரமாக ஆராயுங்கள். அவற்றைக் களைந்தெறிந்து, அமைதியும், சுபீட்சமும், சந்தோஷமும் நிலவக்கூடிய ஒரு சமுதாய அமைப்பை உருவாக்கச் செயற்படுங்கள். புத்தம்புதிய வெள்ளை உள்ளங்களுடன், வாலிபத்தின் வீரியமும் வனப்பும் உங்களுக்கு இயற்கை அன்னை அளித்துள்ள அளப்பரிய அற்புத ஆயுதங்கள். அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி உன்னதத்தை அடைய நீங்கள் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும் என்பதே என் பேரவா!" என ஆசிரியர் கே. பி சிந்தனையைத் தூண்டும் வகையில் உரையாற்றி முடித்ததும் மாணவர்கள் கரகோஷம் செய்து தமது உற்சாகமான உடன்பாட்டைத் தெரிவித்துக் கொண்டனர்.

இன்று வெள்ளிக்கிழமை, நாளைக் காலையே ஆண்டாங்குளம் செல்லலாம் என்ற இனிய எதிர்பார்ப்பு நிறைந்த உள்ளத்துடன் சபையில் அமர்ந்திருந்த சேனாதியின் நெஞ்சிற்கூட, கே. பி யின் பேச்சின் புதிய பார்வை ஒரு தாக்கத்தை உண்டுபண்ணியதைப் போன்று, அவன் உணர்ந்தான். சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த காந்தியைப் பார்த்தபோது அவனுடைய விழிகள் உணர்ச்சிவசப்பட்டு ஒளிர்வதைச் சேனாதி கண்டான்.

இதற்குள் ஒன்றியத் தலைவர் எழுந்து, 'இப்போது செல்வன் சேனாதிராஜன் அவர்கள் உங்களுக்கு இன்னிசை விருந்தளிப்பார்!" என்றபோது, சேனாதி எழுந்து மேடையை நோக்கி நடந்தான். கே. பியின் உரையாடல் ஏற்படுத்திய தீவிரமான சிந்தனையில் இறுகியிருந்த இதயங்கள் இந்த மாற்றத்தை வரவேற்பதுபோன்று, மாணவ மாணவியர் தம் கைகளைத் தட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.

சேனாதிராஜன் மேடையில் ஏறித் தலைவருக்கும் சபையோருக்கும் வணக்கம் கூறும் போதுங்கூட என்ன பாடலைப் பாடுவது என அவன் முடிவு செய்திருக்கவில்லை.ஆனால், அவன் மைக்கின் முன்நின்று ஒரு கணம் தாமதித்துத் தன பார்வையை சூன்யத்தில் பதித்தபோது அவன் இதயவானில் முழுநிலவாக எழுந்த நந்தாவதியின் இளையமுகம், பாடுங்க சேனா! என உந்தியது.

மறுகணம் அவன் இதயத்தின் அடியாழங்களில் கிடந்த அந்தப் பாடல், பாசத்திலும் ஏக்கத்திலும் தோய்ந்து கொண்டு சோகம் ததும்பும் இனிமையைச் சிந்திப் புறப்பட்டது. நந்தா நீ என் நிலா ... நிலா! என்ற பாடல் அடக்கமாக ஆரம்பித்து இனிய நாதவெள்ளமாய்ப் பொங்கிப் பிரவகித்து அத்தனைபேரின் இதயங்களையும் நிறைத்து, மண்டபம் முழுவதும் தளும்பி வழிந்தது.

இப்படியான உணர்வுகளையெல்லாம் மறக்கடித்துவிட்டேன் என நினைத்து அவற்றை மறந்திருந்த ஆசிரியர்      கே.பியின் அறிவார்ந்த இதயங்கூட சேனாவின் பாடலால் நெகிழவே செய்தது. 'ஐ ஆம் சொறி பானுதேவன்... நான் உங்களை மிகமிக அதிகமாகக் காதலிக்கத்தான் செய்கின்றேன்... ஆனால் உங்களுடைய வழி வேறு... அது மிக உன்னதமானது... ஆனால் நானோ மிகவும் சாதாரணமானவள்... வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் அணுவணுவாகச் சுவைக்க விரும்புவள்... நாங்கள் இருவரும் இணைந்து கணவன் மனைவியாகச் சந்தோஷமாக வாழ்வது சாத்தியம் அற்றதொன்று!... எனவே லெற் அஸ் பாட் ஆஸ் பிரண்டஸ்!" எனக் கூறிவிட்டு, தன்னைவிட்டு விலகிக் கொண்டவளையும், அவளுடன் கைகோத்து உலவிய பேராதனியப் பல்கலைக்கழகச் சூழலையும், சட்டென கே. பியின் மனதுக்குள் மணக்க வைத்தது சேனாதியின் சோகம் விரவிய அந்தக் கானம்.

இலேசாகப் பனித்துவிட்ட தன் விழிகளை அவர் மாணவர்கள் அறியாது கையால் துடைத்துக் கொண்டபோது, சேனாதியின் பாடல் முடிந்து அவன் மேடையை விட்டு இறங்கிச் சென்றுகொண்டிருந்தான்.

மண்டபத்திலிருந்த அத்தனை இதயங்களையும் இளக்கி உணர்ச்சி வயப்பட வைத்த அந்தப் பாடலில் கட்டுண்டிருந்த மாணவ மாணவியர் சுயநிலைக்குத் திரும்பிக் கரகோஷம் செய்து தம் ஏகோபித்த பாராட்டைத் தெரிவித்தபோது சேனாதி கூச்சத்துடன் தலையைக் கவிழ்ந்துகொண்டு தனது இருக்கையில் இருந்தான்.

  
கூட்டம் கலைந்து மாணவ மாணவியர் வெளியே வந்தபோது, காந்தி சேனாதியை ஒரு புதுவித அன்புடனும் பக்தியுடனும் பார்த்தான்.

'சேனா! உன்ரை பாட்டு உண்மையிலை சோக்காத்தான் இருந்தது!" என அவன் வாய்விட்டுப் பாராட்டியபோது சேனாதிராஜன் மிகவும் சங்கோஜப்பட்டுக் கொண்டவனாய் அவனிடம் விடை பெற்றுக்கொண்டு வீட்டுக்குச் சென்றான். சினிமாவில் வரும் காதற் பாட்டுக்களையே கண்டுகொள்ள விரும்பாத காந்திகூட சேனாவின் பாடலால் ஈர்க்கப்பட்டிருந்தான். அவனுள் ஆசிரியர் கே. பி யின் கருத்துரைகள் அந்தப் பாடலின் உணர்ச்சிமேலிட்ட இசையுடன் இணைந்து உள்ளத்தை நிறைப்பதுபோற் தோன்றின. நெஞ்சு நிறைய அவனது கடமைகள் கனப்பது போலவும் அவன் உணர்ந்தான்.

(வளரும்)

 


மேலும் சில...
வாசகர்களுடன்..
வட்டம்பூ-01
வட்டம்பூ - 02
வட்டம்பூ - 03
வட்டம்பூ - 04
வட்டம்பூ - 05
வட்டம்பூ - 06
வட்டம்பூ - 09
வட்டம்பூ - 10
வட்டம்பூ - 11
வட்டம்பூ - 12
வட்டம்பூ - 13
வட்டம்பூ - 14
வட்டம்பூ - 15
வட்டம்பூ - 16
வட்டம்பூ - 17
வட்டம்பூ - 18
வட்டம்பூ - 19
வட்டம்பூ - 20 - 21 -
நிலக்கிளி - வட்டம்பூ நாவல்களும் நானும் - 01
நிலக்கிளி, வட்டம்பூ நாவல்களும், நானும் - 02
நிலக்கிளி,வட்டம்பூ நாவல்களும், நானும் - 03

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 15:06
TamilNet
HASH(0x559f03e19478)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 15:06


புதினம்
Thu, 28 Mar 2024 15:06
















     இதுவரை:  24712733 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5660 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com