அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 18 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 29 arrow முட்டாள்களாக்கும் மூட நம்பிக்கைகள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


முட்டாள்களாக்கும் மூட நம்பிக்கைகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தினக்குரல்  
Thursday, 05 October 2006

`தி காட்ஸ் மஸ்ட் பி கிரேசி' (The God's must be crazy) என்று ஒரு படம். 20 ஆண்டுகளுக்கு முன் வந்தது.
ஆபிரிக்க காட்டில் நடக்கும் கதை. நாகரிகமடையாத கறுப்பின மக்களின் கிராமம் ஒன்றில், மேலே பறக்கும் கிளைடர் விமானத்திலிருந்து ஒருவர் ஒரு குளிர்பான போத்தலைத் போட்டு விடுவார். அதைக் கண்டெடுத்த அந்த காட்டுவாசி அது ஏதோ ஒரு புதிய பொருள்; தாம் இதுவரை பார்க்காத பொருள் என உணர்ந்து முதலில் அதைத் தொடமாட்டார். பின் எடுப்பார். தன் குழுவினருக்கு காட்டுவார். அந்தப் போத்தலால் சில பிரச்சினைகள் உருவாகும். அதனால் அதை ஒரு கடலில் போட்டுவிடுவது என முடிவு செய்து போய் போட்டுவிடுவது தான் கதை.

அந்தப் போத்தலை வைத்து என்ன செய்யலாம்; எப்படி பயன்படுத்தலாம் என பல முயற்சிகள் செய்வார்கள். அதாவது, ஒரு புதிய பொருளை மனிதன் தன் பகுத்தறிவால் எப்படி பயன்படுத்துவான் என்பதை இயல்பாகவும் நகைச்சுவையுடனும் படமாக்கியிருப்பார்கள். இந்தக் கதையில் வரும் அந்த மனிதர்கள் நவீன உலகத்தை அறியாத காட்டுவாசிகள். அவர்களுக்கு உள்ள அறிவின் தெளிவு கூட இப்போது இந்தியாவின் நாட்டுவாசிகளுக்கு இல்லையோ என ஐயம் கொள்ளும் அளவுக்கு சில நிகழ்வுகள் அண்மையில் நடந்துள்ளன.

ஊடகத் தொழில் நுட்பம் வளர்ந்தது, ஊகங்களுக்கும் வதந்திகளுக்கும்தானா என்று கவலைப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. வதந்திகள் வாந்தி எடுத்து மக்களின் அறிவை வாட்டி எடுக்கிறது. ஒரு செய்தியைக் கேள்விப்பட்ட மாத்திரத்தில், அதன் அடிப்படை என்னவாக இருக்கும்? உண்மையா? பொய்யா? என குறைந்தபட்ச அறிதல் கூட இருப்பதில்லை. உடனே அச்செய்தியை அப்படியே நம்பி தனக்குத் தெரிந்த பத்து பேருக்கும் அதைப் பரப்பி விடுகிறார்கள்.

இனிப்பான கடல் நீர்

மும்பையின் மாகிம் கடற்கரை - ஆகஸ்ட் 18 இரவு 10 மணி. மீனவர் ஒருவர் எதேச்சையாக கடல் நீரை சில துளிகள் வாயில் விட, ஆகா நீர் இனிக்கிறது எனக் கூறிவிட்டார். அவ்வளவுதான். அருகிலிருந்தவர்களும் குடித்துப் பார்த்து இனிப்பு.... இனிப்பு.. எனப் பரப்பிவிட்டார்கள். அருகிலுள்ள பள்ளிவாசலில் இருந்து தொழுகை முடித்துவந்த ஒருவர் தண்ணீரைக் குடித்துவிட்டு, "சத்தியமா இது அல்லாவோட கருணைதான்; தண்ணீர் கஷ்டம் தீர்க்கிறதுக்காக கடல் தண்ணீரைக் குடிநீரா மாத்திட்டாரு" என்று தன் பங்குக்கு தன் மதப்பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.

இது அல்லா கொடுத்த புனித தீர்த்தம் என்று அந்த இஸ்லலாமியர் மேலும் கூற, `அல்லாஹ் அக்பர்' என்று கூச்சல் போட்டபடி தண்ணீரை எடுத்துச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

இந்தப் புனித நீரைக் குடித்தால் நோய் குணமாகும் என ஒருவர் கிளப்பி விட, மருத்துவமனைகளுக்கு குடிநீர் போத்தல்கள் படையெடுத்ததாம். செய்தியறிந்த பொலிஸ், மாநகராட்சி சுகாதாரத் துறை மூலம் நீரை சோதனை செய்துள்ளனர். கடல்நீரில் வழக்கமாக இருக்க வேண்டிய சோடியம் குளோரைட் 16 பங்கு குறைந்திருந்தது. இது குடிப்பதற்கு உகந்த நீர் அல்ல என்று கூறி விட்டது.

மாதிம் கடற்கரையில் அருகில் உள்ள வேஹர் ஏரி மற்றும் மித்தி ஆற்றிலிருந்து வெளியேறும் திடக் கழிவுகள், நைட்ரேட் ஆகியவை கடலில் கலந்ததால் அந்நீர் இனித்துள்ளது. இதுதான் உண்மை, வேறு எந்த அதிசயமும் நடக்கவில்லை. தண்ணீரை யாரும் குடிக்க வேண்டாம் என மராட்டிய முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் எச்சரித்துள்ளார்.

கடல் நீர் என்பது இயற்கையிலேயே உப்பு நிறைந்தது. அந்நீரிலிருந்துதான் நமக்கு உப்பு கிடைக்கிறது. உலகின் புவிப் பரப்பில் 4 இல் 3 பங்கு கடல்தான். அந்நீர் எப்படி இனிப்பாகும்? அப்படி இனித்தால் ஏதேனும் அதில் கலந்திருக்கலாம். சில சமயங்களில் எண்ணெய்க் கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்து மாற்றம் அடைவது போல. இப்படியெல்லாம் மனிதன் தன் பகுத்தறிவால் சிந்திக்க விடாமல் தடுக்கிறது கடவுள், மதம், மூடநம்பிக்கைகள்.

இதற்கு என்ன காரணம்? பள்ளிக்கூடங்களில் அறிவியல் பாடங்கள் உள்ளன. ஆனால், பகுத்தறிவுப் பாடங்கள் இல்லை. பகுத்தறிவால் மனித இனம் வளர்ச்சியடைந்த வரலாறு இல்லவே இல்லை. பகுத்தறிவைப் புகட்டி இருந்தால் இப்படி நடந்திருக்குமா? சிந்தியுங்கள். கடைசிச் செய்தி, மாகிம் பகுதி கடல் நீர் மட்டும் உப்புக் கரிக்கிறதாம். அல்லாவின் கருணை வற்றி விட்டதோ?

பால் குடித்த சாமிகள்

1995 செப்டம்பர் 11 விநாயகர் சிலைகள் பால் குடிப்பதாக வட மாநிலம் முழுவதும் வதந்தி பரவிட கோயில்களில் பக்திப் பிரவாகம் பொங்கி வழிந்தது. ஆளாளுக்கு பாலோடு போய் வரிசையில் நின்றார்கள். பால் விலை கன்னாபின்னாவென்று உயர்ந்தது. விநாயகர் பால் குடித்தது என்னால்தான் என்று அகில உலக மோசடிப் பேர்வழி சந்திரா சாமி புளுகித் தள்ளினார். தமிழ் நாட்டிலும் ஒரு சில இடங்களில் கோயில்களில் பாலோடு பக்தர்கள் போய் நின்றனர்.

திராவிடர் கழகம் சவால்விட்டது. கழகத் தலைவர் கி. வீரமணி தண்டோரா போட்டு அறிவித்தார். பிள்ளையார் சிலை பால் குடிப்பதை நிரூபித்தால் 1 இலட்சம் ரூபா பரிசு என்றார். ஒருவரும் நிரூபிக்க முன்வரவில்லை. விநாயகனுக்கு கறுப்புச் சட்டையைக் கண்டாலே பயமல்லவா? ஒரு முறை பெரியாரே ரோட்டில் போட்டு உடைந்தாரே எதற்கு வம்பு என்று பால் குடிப்பதை நிறுத்தி விட்டார்.

இப்போது விநாயகரின் அப்பன் சிவனும், அவனது உறவினர் துர்க்கையும் கிருஷ்ணனும் பால் குடிக்க வந்து விட்டார்கள். ஆமாம் இதுவும் வதந்திதான். உத்திரபிரதேசத்தில் உள்ள பரேலி துர்க்கையம்மன் கோயிலில் உள்ள கடவுள் சிலை பால் குடித்ததாம். ஒரு பெண் வதந்தியைப் பரப்ப, மதுரா, அகமதாபாத், வதோதரா போன்ற இடங்களிலும் பக்தர்கள் பாலோடு படையெடுத்தார்களாம். இது வெறும் புரளி என்ற பின்னர் தெரிய வந்தது என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. உலோகங்களின் கலவைக்கு இடையே மிக நுண்ணிய துவாரங்கள் இருக்கும். அது ஓரளவு (மிகச் சிறு அளவு) திரவத்தை உறிஞ்சும் சக்தி கொண்டது. நம் வீட்டு தண்ணீர் குழாய்களை அடைக்கும்போதே அதன் கடைசித் துளியை அந்த உலோகம் உறிஞ்சிக் கொள்வதைக் காணலாம். இந்த அறிவியல் காரணம் தான் சாமி சிலைகள் பாலை உறிஞ்சுவதற்கும் காரணம். இதேபோல கற்சிலைகளில் பால் உறிஞ்சியதற்கு காரணம் உண்டு. அது நீர்ப்பரவல் தத்துவம், கற்சிலைகளிலும் ஒரு சில சொட்டு நீர் உறிஞ்சி நீர்ப்பரவல் ஏற்படுவதும் உண்டு.

இந்த அறிவியல் உண்மைகளைத் தான் பக்தி பயன்படுத்திக் கொள்கிறது. ஏதேனும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, கடவுள் என்ற மாயத் தோற்றத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள். ஒருவேளை, உலகில் கடவுள் நம்பிக்கை குறைந்து வருவது கூட இப்படிக் கதைகட்டி விடுவதற்கு காரணமாக இருக்கலாம். பகுத்தறிவின் முன் கடவுள் இன்னும் என்னென்ன பல்டியெல்லாம் அடிக்கப்போகிறார் பார்ப்போம்.

பூ விழும் குழந்தைகள்

முதலில் பார்த்தவை வட புலத்தில் என்றால், இது தமிழ்நாட்டில் மந்திர பாணியில் ஒரு கண்கட்டி வித்தை. இல்லை இல்லை கண் கொட்டி வித்தை. ஆமாம் கண்களில் இருந்து பூ கொட்டுகிறதாம். அதாவது கண்களில் இருந்து பூ விழுகிறதாம். கண்ணில் பூ விழுந்து கேள்விப்பட்டிருப்பீர்கள். இது அது அல்ல. கண்ணில் இருந்தே பூக்கள் கொட்டுகிறதாம்.

திருவாரூர் மாவட்டம் இனாம் கிளியூர் அருகேயுள்ள ரெகுநாதபுரம் என்ற ஓர் கிராமம். அங்கே கிருத்திகா, ரோஜா என்ற 10 மற்றும் 7 வயதுச் சிறுமிகள். இவர்களுக்கு சமயபுரத்து அம்மனின் அருள் வந்துவிட (?) இச்சிறுமிகளின் கண்களில் இருந்து பூ கொட்டுகிறதாம். அக்கம் பக்கத்திலிருந்த மக்கள் படையெடுத்து காணிக்கை செலுத்தி குறி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்தக் குழந்தைகளின் குடும்பத்தில் சொத்துப் பிரச்சினை, `ஒரு மூங்கில் தோப்பு இடத்தில் பங்காளிக்குள் சண்டை. இதனை முடிவுக்குக் கொண்டு வர அந்தப் பிரச்சினைக்குரிய இடத்தில் கோயிலைக் கட்டி இடத்தை ஆக்கிரமிக்க இந்த பூ விழும் நாடகம் என சில பத்திரிகைகள் எழுதியுள்ளன. அம்மனின் உத்தரவு பெறப் போயிருக்கிறாள் எனக் கூறி வீட்டுக்குள் சென்று பூக்களை கண்ணில் வைத்து (இமைகளுக்குள்) மறைத்து வெளியே வந்து உருட்டி எடுத்து ஊரை நம்பச் செய்து வருகிறார்களாம். இந்தச் சிறுமியைப் பின்தொடரச் சென்ற நிருபரொருவரை அனுமதிக்காமல் தடுத்துள்ளார்கள். குழந்தை வெளியே வந்தவுடன் வீட்டுக்குள் அம்மனை வழிபடச் செல்வதாகக் கூறி உள்ளே சென்ற நிருபர் அங்குள்ள சாமிப் படத்தில் முல்லை, கனகாம்பரம் போன்ற பூக்கள் இருந்ததைப் பார்த்துள்ளார். அந்தப் பூக்களைத்தான் அச்சிறுமி கண்ணில் மறைத்து எடுத்து வெளியே வந்திருக்கிறாள்.

"மருத்துவ இயல் ரீதியாக கண்களில் கொழுப்புக் கட்டிகள் தோன்றலாம். அது உடைந்து வெளிவரும். ஆனால், பூவெல்லாம் வராது. அதற்கு வாய்ப்பே இல்லை" என்று தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவர் மோகன்தாஸ் கூறுகிறார். மேலும், இப்படி பூக்களை கண்களில் திணித்து வைப்பதால் குழந்தைகளின் கண்களையும் பாதிக்கும்." என்றார்.

தனிப்பட்ட ஒருவரின் சுயநலத்திற்காக, பிரச்சினைக்காக மூட நம்பிக்கைகள் பரப்பப்படுகின்றன. வதந்திகளைப் பரப்புபவர்களைத் தண்டிக்க சட்டம் உள்ளது. ஆனால் அந்தச் சட்டம் கடவுள், மதம், பக்தி என்ற பெயரில் பரப்பப்படும் வதந்திகளின் மீது பாயாது.

ஊடகங்களும் தமது சமூகப் பொறுப்பை உணர வேண்டும். "சாமி சிலைகள் பால் குடித்ததால் பரபரப்பு" என ஊடகங்கள், பத்திரிகைகள் செய்தியைப் (வதந்தியை) பரப்புகின்றன. இந்தச் செய்தியின் வார்த்தைகள் வதந்தியை உண்மையாக்கும் தன்மை கொண்டவை. மறுநாள் தான் அதன் அறிவியல் காரணங்களைக் கூறுகின்றன. உடனே ஒரு செய்தியைக் கேள்விப் பட்ட மாத்திரத்தில் அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து மக்களிடம் தெரிவிக்கும் பொறுப்பை பத்திரிகைகள் உணர்ந்தாக வேண்டும்.

நன்றி: தினக்குரல் [02 - October - 2006] 

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)



மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 18 Apr 2024 20:21
TamilNet
HASH(0x5591413aee88)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 18 Apr 2024 19:26


புதினம்
Thu, 18 Apr 2024 19:26
















     இதுவரை:  24778066 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3113 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com