அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 30 arrow எனது நாட்குறிப்பிலிருந்து - 01
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


எனது நாட்குறிப்பிலிருந்து - 01   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: யதீந்திரா  
Friday, 19 January 2007

பொங்கல் நினைவுகள்   நான் நினைக்கிறேன் தமிழர்களின் கொண்டாட்டங்களிலேயே ஓர் ஒன்றுபட்ட உணர்வையும், அன்னியோன்யத்தையும் ஏற்படுத்தும் நிகழ்வாக இந்த பொங்கலை மட்டும்தான் சொல்ல முடியுமென்று. அதுவும் கிராமத்திலென்றால் சொல்லவே தேவையில்லை அப்படியொரு மகிழ்ச்சி, குதூகலம். அது ஒரு காலம்.

அப்பொழுதெல்லாம் எல்லாவற்றிலும் குதூகலத்தை மட்டுமே தேடிய நாட்கள். சடங்குகள், திருவிழாக்கள் என்றாலே ஊர் கூடிக்கிடக்கும். என்னளவில், சடங்குகளில் உட்கிடந்த மூடநம்பிக்கைகளை, சமூக ஏற்றத்தாழ்வுக் கூறுகளை பிரித்தறியத் தெரியாத காலமது. கடவுள், மதம் இவற்றிலெல்லாம் ஈடுபாடற்றுப் போகுமளவிற்கான தேடலும் சிந்தனையும் விரிவுகொண்ட பின்னர்தான் அன்றைய ஈடுபாடுகள் எல்லாமே வெறும் வேடிக்கைகளாகத் தெரிந்தன. எங்கள் வளவு வைரவர், எங்கள் வீட்டிற்கு ஜந்து வீடுகள் தள்ளி இருந்த கண்ணகை அம்மன், அதில் விடிய விடிய இடம்பெறும் சாமியாட்டம். கண்ணகை அம்மனுக்கு புதுப் பனையோலைப் பெட்டியில் பூசைச் சாமான்களை சுமந்து சென்றது, காய்ச்சல் என்றவுடன் பூசாரி சிவலிங்கத்திடம் போய் திருநீறு போட்டுக் கொண்டது எல்லாமே, இன்று மனதில் வேடிக்கைகளாக மட்டுமே எஞ்சிக் கிடக்கின்றன

பொங்கல் வருகிறது என்றவுடன் ஏதோ சில அன்றைய நினைவுகள் என்னை உரசிச் சென்றன. அவற்றின் பதிவுகள்தான் இது. ஏதோவொன்றை இழந்துவிட்ட உணர்வு என்னுள். எனது சொந்த ஊரான தம்பலகமம் - புதுக்குடியிருப்பிலிருந்து 1990களின் இறுதிப்பகுதியில் நகரத்திற்கு இடம்பெயர்ந்தேன். நீங்கள் நினைத்துவிடக் கூடாது, எனது இடப்பெயர்வென்பது ஏதோ நகர வாழ்வின் மீது ஏற்பட்ட ஈர்ப்பில் நிகழ்ததென்று. இனியும் இருக்க முடியாது, இருந்தால் சிங்கள இராணுவம் எனது கதையை முடிந்துவிடும் என்ற அச்சத்தில் நிகழ்ந்ததுதான் எனது பெயர்ச்சி. இந்த அச்சம் என்னைவிட எனது தாயாருக்கும் அம்மம்மாவுக்கும்தான் இருந்தது. அப்பொழுது நான் மிகவும் சிறிய தோற்றத்தில் இருந்தேன், அதனால் தப்பித்துக் கொண்டேன் இல்லாவிட்டால் இப்பொழுது புதைத்த இடத்தில் புல்லு முழைத்திருக்கும். நாங்கள் ஒரு காலத்தில் தம்பலகாமத்திலிருந்து நடந்தே கிண்ணியாவரைக்கும் ஓடியிருக்கிறோம். இடையில் சில நாட்கள் அகதிகளாக சில பாடசாலைகளில் தஞ்சமடைவது பின்னர் நடப்பது இப்படியாக கழிந்த காலமது. இடையில் குறிஞ்சாக்கேணி என்னும் இடத்தில் சில நாட்கள் தங்கியிருந்தேன். ஒரு நாள் முகாமிலுள்ள முன்று இளைஞர்கள் குளித்துவிட்டு பாடசாலை வாசலில் நின்றார்கள். எவ்வளவு நேரம்தான் இப்படி அடைந்து கிடப்பது சற்று காலாற நடப்பமே என அவர்கள் நினைத்திருக்கக் கூடும். அந்த வழியாக வந்த ஆமி ரக் அவர்களை ஏற்றிச் சென்றது, பின்னர் ஒரு அரை மணித்தியாலம் கழிந்திருக்குமென்று நினைக்கிறறேன், முகாமிலுள்ளவர்கள் கதைத்துக் கொண்டார்கள் சிவத்தபாலத்தடியில் ஆரையோ முன்று வொடி எரியுதாம். ‘சிவத்தப்பாலம்’ என்பது தம்மலகாமத்திற்கும் சூரன்கல் என்ற முஸ்லிம் கிராமதிற்கும் இடைப்பட்ட பகுதியில் இருக்கும் ஒரு பாலத்தின் பெயர். இந்தப் பாலத்தால் பயணம் செய்யும் போது நம்மையறியாமலேயே ஒரு அச்சவுணர்வு தொற்றிக் கொள்ளும். அந்த பாலத்தில் எந்தவிதமான காப்பரன்களும் கிடையாது இரண்டு பக்க தடுப்பரன்களும் இடிந்து விழுந்துவிட்டன, பயணம் செய்யும் போது எப்பொழுது இடிந்து விழுமோ என்ற உணர்வுதான் ஏற்படும் தவிர இந்தப் பாலத்தில் முதலைகள் அதிகமாக இருப்பதாகவும் கூறுவார்கள். இப்பொழுது அந்தப் பாலம் ஓர் அரசுசாரா நிறுவனத்தின் உதவியுடன் திருத்தப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன்

 

இப்படியொரு சூழலில்தான் எனது நகர் நோக்கிய பெயர்ச்சி நிகழ்ந்தது. நகரத்தின் போலித்தனத்துள் அகப்பட்டவாறே கடந்த 16 வருடங்கள் கழிந்துவிட்டன இந்த 16 வருட நகர வாழ்வில் ஒரேயொரு முறைதான் புதுப்பானையில் பொங்கியிருக்கிறோம் மற்றையதெல்லாம் நாளாந்த சோற்றுப் பானைப் பொங்கல்தான்

எனது சிறுபிராயம் முழுவதும் எனது கிராமத்தில்தான் கழிந்தது நாளை பொங்கல் என்றால் அன்று இரவு முழுவதும் நித்திரை கொள்ளாமல் பேச்சுதான். அம்மம்மா நான் எனது மாமா சத்திய சீலன்,  எங்களது பேச்சு ஒரு மணிவரை நீளும், இடையில் ஒரு குட்டித் தூக்கம் மீண்டும் நாலுமணிக்கு சக்கரை நறுக்குவதிலிருந்து வேலைகள் தொடங்கிவிடும் இந்த நேரத்தில் கிராமமே விழித்திருக்கும் மஹாகவி ஊர் கூடித் தேர் இழுத்தல் என்று சொன்னது போன்று இது ஊர் கூடி நிகழ்த்தும் பொங்கல். நான் எனக்குத் தெரிந்த வேலையில் மூழ்கிவிடுவேன் மணலை பரப்பி மேடையமைத்து கோலம் போடுவது வரைக்கும் எனது வேலைதான் இதற்காக முதல் நாளே எங்கள் வீட்டிற்கு பக்கத்திலுள்ள கோப்பிரட்டி ஒழுங்கையில் மணல் அள்ளிக் கொள்வோம். சதுரமாக அமைந்த மேடையில் நாலு பக்கமும் கூராக அமையுமாறு மேடை அதில் சிகப்பிலும் வெள்ளையிலுமாக கோலம.; வெள்ளைக்கு கோதுமை மாவையும் சிகப்பிற்கு செங்கல் தூளையும் பாவிப்போம் பின்னர் கிணற்றடியில் உள்ள கரும்பில் ஒன்று இரண்டை வெட்டிக் கொள்வேன் அத்துடன் எனது வேலை முடிந்தது, இனியென்ன சீனாவெடியை ஒரு முறை பார்த்துக் கொள்வதுதான். சரியாக சூரிய வெளிச்சம் பரவத் தொடங்கியதும் பானையில் பால் பொங்கி வழியும். நான் சீனாவெடிக்கட்டை கொழுத்திப் போடுவேன் ஒவ்வொரு இல்லத்தினதும் சீனாவெடி ஓசைகள் ஒன்றாக காற்றில் கலக்கும். முதலில் எங்கள் வளவு வைரவர்தான் உண்பார். எழு எட்டு மணிக்கெல்லாம் அள்ளயலில் உள்ளவர்களுக்கெல்லாம் கொடுத்து விடுவோம் நான்தான் கொண்டுபோய்க் கொடுப்போன் முதலில் பக்கத்து வீட்டு பானன்டி வீட்டுக்குத்தான் கொடுப்போம் அவர்கள் எங்களுடன் மிகவும் அன்னியோன்யமாக இருந்த இஸ்லாமிய குடும்பத்தினர். அவர்கள் ஒரு பேக்கரி வைத்திருந்தார்கள் ஒவ்வொரு நாளும் காலையில் ஏதாவது எனக்குத் தருவார்கள் அதனால் நான் அந்த வீட்டு அன்ரியை பானன்டி என்று கூப்பிடுவது பழக்கமாகிவிட்டது. அவரது பெயர் பரிதா. அவர்கள் பின்னர் வேறு ஒரு முஸ்லிம் பகுதிக்கு சென்று விட்டார்கள் இப்பொழுதும் நான் அவரை கானும்போது பானன்டி என்றுதான் கூப்பிடுகிறேன்.

ஒருவாறு பொங்கல் கதைகள் முடிவுக்கு வரும் ஆனால் மறுநாள் இன்னொரு பூரிப்பு காத்திருக்கும் அது மாட்டுப் பொங்கல், எங்களிடம் மாடு இல்லை ஒரு காலத்தில் இருந்ததாக அம்மம்மா சொல்வார் அது வேறு கதை. நான் ஏனையோரது வீட்டுக்குச் செல்வேன் பின்வீட்டு ஆனைக்குட்டியர் வீட்டிற்கு செல்வேன் அந்த வீட்டில் என்னோடு படிக்கும் காந்தன் வேலியில் நின்று, ‘டேய் டீசன் என்ன புடுங்கிக் கொண்டிருக்கிறா கெதியா வாவன்டாப்பா’ என்று கத்திக் கொண்டிருப்பான். டீசன் என்பது எனது வீட்டுப் பெயர். பசுப்பால் புக்கை அவ்வளவு ருசியாக இருக்காது ஆனால் எருமைப்பால் புக்கை இருக்கிறதே அது ஒரு தனி ருசிதான் ஆனால் எருமைப்பால் புக்கை சாப்பிடுவதென்டால் எருமைப் பட்டிக்குத்தான் செல்ல வேண்டும் அங்கு மத்தியானம் வரைக்கும் புக்கை இருக்கும் அந்தளவிற்கு தாராளமாக பொங்குவார்கள். மாட்டிற்கு குங்குமம், சந்தனம் எல்லாம் வைத்து காசு, மற்றும் வடைமாலை போட்டு ஒரு தட்டு தட்டி விடுவார்கள். மாடு ஓடித்திரியும். நான் பின்வீட்டு தம்பியன் எல்லாம் மாட்டைத்திரத்தித் திரிவோம் அவற்றை எடுப்பதற்காக இப்படியாக கழியும் அந்த இரண்டு நாள் பொழுது.

இப்பொழுது அதனை நினைக்க மட்டும்தான் முடிகிறது. அப்படியொரு குதூகலம் மீண்டும் வாய்க்காதா?; எல்லாவற்றையும் இழந்து நிற்கும் போதுதான் கடந்த காலம் குறித்து நமக்கு நாட்டம் ஏற்படுகின்றதோ என்னவோ.

தொடரும்

 

 

பிற்குறிப்பு
1
பானன்டி-பரிதா, தற்போது ‘தொன்னிற்றியாறு’ என்னும் முஸ்லிம் பகுதியில் வாழ்ந்து வருகின்றார், இவரது கனவர் மத்திய கிழக்கு நாடொன்றில் வசித்து வருகின்றார். இவருக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு மகள் ஒரு பிள்ளையின் தாயாக இருக்கின்றார். மகனும் திருமணம் செய்திருக்கின்றான் பிள்ளையில்லை.

2
காந்தன்,
இவன் எனது சிறுவயது பள்ளித் தோழன் நான் அகதியாக இடம்பெயர்ந்த பின்னர் அவனுடன் எந்த தொடர்பும் இருக்கவில்லை பின்னர் கேள்வியுற்றேன் கடல்வழியாக இந்தியா செல்ல முற்பட்ட போது சிறிலங்கா படையினரால் கொல்லப்பட்டுவிட்டதாக உடல் கூட கிடைக்கவில்லையாம்.

3
பின்வீட்டு தம்பியன்
இவன் எனது சிறுபிராயத்து நன்பன். வயதில் என்னைவிட சிறியவனான இவன் தற்போது ஒரு குழந்தைக்கு தகப்பனாக இருக்கின்றான். இவனது தயாரும் தகப்பனும் ஒன்றாகவே பட்டைசாராயம் அடித்துவிட்டு சன்டைபிடிப்பார்கள். நான் இறுதியாக எனது கிராமத்திற்கு சென்றது எனது அம்மம்மாவின் இறப்பிற்குதான். எட்டு வீட்டிற்கு தம்பியனின்; அம்மா மாரியாச்சியும் தகப்பன் வடிவேலுவும்தான் சமைத்தார்கள.; அவர்கள் சமைத்ததை நாங்கள் சாப்பிடுவதா? முன்வீட்டு ஆனந்தன் வீட்டார் எட்டு வீட்டை பகிஸ்கரித்தனர்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


 


மேலும் சில...
எனது நாட்குறிப்பிலிருந்து - 02
எனது நாட்குறிப்பிலிருந்து - 03
எனது நாட்குறிப்பிலிருந்து - 04
எனது நாட்குறிப்பிலிருந்து - 05
எனது நாட்குறிப்பிலிருந்து – 06
எனது நாட்குறிப்பிலிருந்து - 07

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 19 Apr 2024 01:23
TamilNet
HASH(0x5630560fc330)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 19 Apr 2024 01:32


புதினம்
Fri, 19 Apr 2024 01:33
















     இதுவரை:  24778893 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2879 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com