அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 13 December 2025

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 30 arrow காலத்துயர்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


காலத்துயர்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கருணாகரன்  
Wednesday, 14 February 2007

சு.வி.பற்றிய நினைவுக்குறிப்புகள்
கவிஞர் சு.வில்வரெத்தினம் 
 
சு.வி.யின்  கவிதைகளைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும்போது இடையில், சற்றும் எதிர் பாராமல் அவரைப்பற்றிய அஞ்சலிக்குறிப்பை எழுதநேர்ந்திருக்கிறது. இந்த அதிர்ச்சியான நிலை மையிலிருந்து   விடுபடுவதற்கு சிரமமாகவே  இருக்கிறது. சற்றும் எதிர்பாராத நிலை இது. பெருந்துயரம் நிரம்பியுள்ள கணங்கள் இவை.
 
அண்மையில் சு.வி தொடர்பாக இரண்டு இழப்புக்கள் எனக்கு நேர்ந்திருக்கின்றன. முதலில் அவருடைய முழுக்க கவிதைகளின் திரட்டான "உயிர்த்தெழும் காலத்திற்காக " என்ற நூல் என் கையிலிருந்து எங்கோ தவறிவிட்டது. அவர் தன்கையால் எனக்குத் தந்த புத்தகம். விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்த அந்தக் கவிதைத் தொகுப்பைப் போல இதுவரையில் ஈழக்கவிஞர் எவருடைய நூலும் முழுமையாகவும் அத்தனை நேர்த்தியோடும் வந்ததில்லை. (அடுத்ததாக புதுவை இரத்தினதுரையின் 'பூவரசம் வேலியும் புலுனிக்குஞ்சு களையும்'  தொகுதியைச் சொல்லலாம்) அந்தத் தொகுதி எப்படியோ தொலைந்துவிட்டது. அது தாளாத துயரத்தைத் தந்தது. நண்பர்களிடம் அந்தப் புத்தகம் தொலைந்ததைப் பற்றிச் சொல்லித்  துக்கப் பட்டேன். ஆனால் அந்தப்புத்தகம் தொலைந்ததைப் பற்றி சு.வி.யிடம் நான்  சொல்லவில்லை. சொல்லத் துணிந்ததுமில்லை. அந்தத் தொகுதிபற்றிய மதிப்பீட்டையும் விமர்சனங்களையும்   அது பற்றிய கருத்துக்களையும் சு.வி. எதிர்பார்த்திருந்தார். பரவலாக அது பற்றிய அபிப்பிராயங்களை ஒவ்வொரு வரும் எப்படிச் சொல்வார்கள் என்று காத்திருந்தார். ஆனால், சு.வி.யின் எதிர்பார்ப்புக்கு எதிராகவே நிலைமை இருந்தது. ஒன்றிரண்டு விமர்சனக் குறிப்புக்களைத்தவிர   மிக ஆழமாகவும்  விரிவாகவும் யாரும் அந்தத் தொகுதிக்கு முழுத்திரட்டுக்கு விமர்சனங்களை எழுதவும் இல்லை. முன்வைக்கவும் இல்லை. ஏன் அதற்குரிய துணிவு நிகழ வில்லை என் று புரியவில்லை. அவரிடம் சொன்னவாறு உரிய காலத்தில் என்னாலும் விமர்சனத்தை எழுதமுடியவில்லை. பின்பு நான் அந்தக் கவிதை களுக்குரிய விமர்சனத்தை எழுதிக்கொண்டிருந்த போது புத்தகம் தவறிவிட்டது. விமர்சனமும் இடையில் தடங்கலாகிவிட்டது. இது முதல் துயரம்.
 
இப்போது இரண்டாவது  இழப்பு நேர்ந்திருக்கிறது. முதல் இழப்பை ஈடுசெய்யலாம். சு.வி.யை இழந்ததை எப்படி ஈடுசெய்ய முடியும்? யாரால் அதனை சமன்செய்ய இயலும்? எதனால் அந்த வெற்றிடத்தை நிரப்பிவிடவும் முடியும்?
 
 à®šà¯.வி.யை நல்ல மனிதர், மிக நல்லவர். நல்லவர் என்பதற்கு என்ன உதாரணத்தைச் சொல்ல முடியும்? அவரையே சொல்வதைத்தவிர. எளிமையானவர். இயல்பான எளிமை வாழ்வே எளிமை என்றவாறானவர். எப்படி அவரால் அப்படி ஒரு அழகு நிறைந்த வாழ்க்கையை, ஆச்சரியம் நிறைந்த வாழ்க்கையை வாழமுடிந்திருக்கிறது? யாராலும் வாழமுடியாத அளவுக்கு அவருடைய வாழ்க்கை தனித்துவமாகவும் மிகச் சாதாரணமாகவும் இருந்தது.   மிகச் சாதாரணமான  வாழ்க்கை. ஒரு சைக்கிளுடன் மட்டும் கழிந்த அவருடைய வாழ்க்கை எல்லாத் தளங்களிலும் வேர்விட்டு நின்றது. அந்த வேரோட்டம் தான் சு.வி.யின் பலம். சு.வி. விடுதலையை நேசித்தார்.தேசவிடுதலையை விரும்பினார். இனவிடுதலையை யாசித்தார். மனித விடுதலையை அவாவினார். அவர் ஒரு யதார்த்தவாதி.
1980 களின் முற்பகுதியில் சு.வி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கத் தொடங்கினார். தமிழீழ விடுதலைப்புலிகளை தீவகத்தில் ஆதரித்து உறவுகொண்டார். தொடர்ந்து அவருக்கு போராட்டத்தோடும் போராளிகளோடும் உறவு வளர்ந்தது. அன்பில் வளர்ந்த உறவு அது. சு.வி. அன்புமயமானவர் என்பதால் அவருடைய உறவுவட்டம் இயல்பாகவே பெருக்கத் தொடங் கியது. போராளிகள் தலைமுறை தலை முறையாக  சு.வி.யுடன் ஒட்டிக்கொண்டார்கள்.
 
எண்ணற்ற போராளிகளின்  அறிமுகமும் உறவும் சு.வி.க்குத் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அவர் தன்மனதில் படுகின்ற உண்மைகளை எந்தத் தயக்கமுமில்லாமல்   போராளிகளுடன்   பகிர்ந் திருக்கிறார். அவர் பல போராளிகளை  ஆற்றுப் படுத்தியிருக்கிறார். உற்சாகமூட்டினார். பிரிவுடனும் கருணையோடும் ஆதரிக்கிறார். விடுதலை என்ற எல்லையற்ற   தாகத்தோடு இருந்த சு.வி. ஒவ்வொரு போராளிகளையும்  பேரொளியூட்டும் சுடர்கள் என்றே கருதினார்.
சு.வி. தன்னுடைய இளமைப் பிராயத்திலேயே அரசியலிலும் சமூக நடவடிக்கைகளிலும் ஈடுபடத்தொடங்கிவிட்டார். இதில் அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர் மூத்த படைப்பாளியும் சமூகப் போராளியாகவுமிருந்த மு.தளையசிங்கம். மு.த.வுடன் இணைந்து தீவுப்பகுதியில் நடந்த சாதீயத்துக்கு எதிரான போராட்டங்களில் சு.வி ஈடுபட்டார். அந்த நாட்களில் அவர்  இளைஞர். துடிப்புமிக்க இளைஞராக இருந்ததால்  மிகத் தீவிரத்தோடு மு.த.வுக்கு பலமாக இருந்து சமூகப்போராட்டங்களில் உழைத்தார். அரசியலிலும் சமூகப் பார்வையிலும் இலக்கியத்திலும் சு.வி. மு.தளையசிங்கத்தையே அதிகமும் பின்பற்றினார்.
 
மு.த.வலியுறுத்திய மெய்யுள் என்ற இலக்கியக் கோட்பாட்டை சு.வி. தொடர்ந்தார். மெய்யுளில் மு.த.முன்வைத்த கலைஞனின் மாண்பையும் அடிப்படைகளையும் சு.வி. பின்பற்றினார். அதை அவர் சாட்சிபூர்வமாக்க முயன்றார். இந்த அடிப்படையிலேயே சு.வி.இரண்டு தளங்களிலும் இயக்கினார். ஒன்று அவரது படைப்புச்செயற்பாடு. மெய்யுளை வலியுறுத்தும் அல்லது மெய்யுளின் அடிப்படையிலான படைப்பு முறைமையை சு.வி. தொடர்ந்தார். இரண்டாவது சு.வி.யின் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாடுகளும் இவற்றோடிணைந்த வாழ்க்கையும்.
1971 இல் சு.வி. மு.த.வுக்குப் பலமாக சாதியத்துக்கெதிராக உண்ணாவிரதம் இருந்ததில்  இருந்து அவரது  இறுதிக் கணம் வரையான சமூக அரசியல் செயற்பாடுக்கும் ஈடுபாட்டுக்கும்   ஒரு தொடர்ச்சியுண்டு. அவர் ஒரு போதும் தனித் திருந்ததில்லை.
 
முதலில் தீவுப்பகுதியில் வேறுபாடுகளில்லாமல் சகலரும் கிணறுகளில் தண்ணீர் அள்ளுவதற்கான உரிமை வேண்டுமென்றும் அப்படியானதொரு சமநிலை உருவாகவேண்டுமென்றும் மு.த. வுடன் இணைந்து சு.வி. போராடியபோது கடுமையாகத்தாக்கப்பட்டார். இதில் மு.த.வும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். பின்னாளில் மு.த.வின் இறப்புக்கும்  இதுவே காரணமாகியது. அப்போது சு.வி.யும் கடுமையான அடிகாயங்களுக்குள்ளாகினார். குருதியும் சிந்தினார். அந்தளவுக்குத் தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்தார்.
 
சு.வி.யின் உறுதி என்பது அறிவினாலும் தெளிவினாலும் உருவாகியது. பின்னாளில் அவர் தமிழ் தேசியத்தை அணுகிய விதத்திலும் படைப்புச் செயற்பாட்டைத் தொடர்ந்த முறையில் கூட அவரு டைய இந்த உறுதியைக் காணலாம். அவர் இந்திய சிறிலங்காப்படைகளின் மக்கள் விரோதச் செயற் பாடுகளை எதிர்த்தார். சிறிலங்கா அரசின் அராஜ கத்துக்கு எதிரான மனோபாவத்தை வளர்த்தார். சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை விமர்சித்தார். ஆனால் சு.விற்கு பௌத்தத்தின் மீது மேலான புரிதலும் ஈடுபாடும் இருந்தது. அவர் எல்லை கடந்த வரையறைகளற்ற பிரபஞ்ச வெளியில் அன்பைக் கண்டார். அன்பில் உருவாகும் விடுதலையைக் கண்டார். மானுடம் என்பதே அன்பின் விளை பொருள் என்றறிந்தார். சு.வி.யின் பரப்பு, எல்லையற்ற பிரபஞ்சமாகவே இருந்தது. அவருள் சுடர்ந்த அறிவும் அவருள்ளிருந்த உறுதியுமே இதற்குக் காரணம். இந்த விரிந்த பார்வைக்கும் அன்பிணைந்த பிரிவுக்கும் அவருக்கு புங்குடுதீவு சர்வமத ஆச்சிரமத்துடனிருந்த உறவும் ஒரு காரணம். அதிலும் அன்னை கமலா திருநாவுக்கரசு அவர்களுடன் தொடர்ந்து சு.வி.கொண்டிருந்த ஆத் மார்த்த உறவு அவருடைய ஞானத்தை மேலும் வெளிச்சமாக்கியது.
 
சு.வி.எதற்கும் துணிந்தவர். அவருடைய பலம் அன்பிலேயே இருந்தது. அவருடைய கவிதைகளும் அன்பினையே வலியுறுத்தின. அவருடைய சகல காரியங்களும் அன்பின் நிமித்தமானவை. அவர் பேசுவதுபோல இன்றுவரை யாரும் பேச நான் கேட்டதில்லை. நான் மட்டுமல்ல யாரும் அவர் போல வேறெவரும் பேசுவதைக் கேட்டல் இயலாது. அன்பின் மொழியே அவர் பேச்சு. சு.வி.யுடன் உரை யாடுவது என்பதே எவருக்கும் அதிசயத்தை ஊட்டுவது. அவர் பேசிக்கொண்டேயிருப்பார். பொழுது தெரியாமல் அவருடைய பேசும் முறையையும் அந்த உரையாடலின் ஆழத்தையும் அழகையும் ரசித்துக்கொண்டேயிருக்கலாம். அவருடைய குரலில் இசையிருந்தது. அன்பிழைந்த லயமிருந்தது. மற்றவரை மதிக்கும் குணமிருந்தது. பிறருடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் திறனிருந்தது. அதனால்தான் அவரைச் சகலரும் மதித்தார்கள். அவரில் எல்லோரும் அன்பு கொண்டிருந்தார்கள். சு.வி. க்கு ஆறு தலைமுறைகளிலும் உறவிருந்தது. அந்த உறவு இன்றும் பல தலை முறைகளுக்கும் தொடரும். அந்தளவுக்கு அந்த அன்புக்கு ஏணியுண்டு.
 
சு.வி. எல்லாவற்றையும் மிக ஆழமாகவே நோக்கும் இயல்புடையவர். அவர் ஒரு தடவை சொன்னார் எங்களின் விடுதலைக்கு நாங்கள் பலமானவர்களாக இருக்கவேண்டும். உறுதி கொண்ட மனமும் உடலும் இருக்கும் ஒரு சமூகம் எதற்கும் அடிபணிந்து விடாது. மனதில் தென்பையும் தைரியத்தையும் வளர்க்கவேண்டும். உண்மையொளியும் அறிவும் சுடரும் உறுதியே பெரும் பலமாகும் என்று இதேபோல உடல் உறுதியும் முக்கியமானது. என்பதில் தீராத அக்கறை கொண்டிருந்தார். எந்தப் பஞ்சமும் ஈடேற்றத்தை தரமுடியாது என்று அவர் வலியுறுத்தினார்.
சு.வி.யின் எதிர்ப்பியக்கம் மானுட விடுதலையை விரும்பும் அடிப்படையிலானது. அதற்காகவே அவர் உறுதியை வலியுறுத்தினார். உறுதியே எதிர்ப்பியக்கத்தின் அடிப்படை என்றுணர்ந்திருந்தார். தைரியமுள்ள ஒரு சமூகம் அநீதியைக் கண்டு அஞ்சாது என்பதும் அறிவு சுடரும் போது அதனால் தவறுகள் நிகழாது என்பதும் சு.வி.யின் தரிசனமாகியிருந்தன.
 
சு.வி தன் சக படைப்பாளிகளை மிக ஆழமாக நேசித்தார். அவருடன் யாரும் பகைமை கொண்ட தாக நானறிந்ததில்லை. சு.வி.யின் கோபம் மிக உக்கிரமானது. ஆனால் அது யாரையும் காயப் படுத்தாது. நீதியான கோபம் அவருடையது என்று உணரவைக்கும் இயல்புடையது அது. அதனால் யாரும் அவருடன் கோபித்ததில்லை. அவருக்கு எதிர்முகங்கள் உருவாகவில்லை.
குழந்தைகளிடத்தில் சு.விக்கிருந்த ஈடுபாடு மிகவும் அதிகம். வாஞ்சையோடு அவர் எவரோடும் குழந்தையாகி நின்றார். சு.வி . யின் கவிதை மொழி யிலும் இந்தக் குழந்தைமனத் தன்மையுண்டு. அவருடைய கவிதைமொழி மிக மிகத் தொன் மையானது. அதேவேளை அது மிக மிக நவீனமா னதும் கூட. அதனால் தான் அவர் தமிழ் மரபின் தொடர்ச்சியாய் விளைந்த கவிஞராகக் கருதப்படு கிறார். சு.வி.யின் கவிதைகளைப் பற்றி தமிழகத்தின் முக்கிய படைப்பாளிகள், அறிஞர்கள் பலரும் கூட உயர்ந்த மதிப்பையே வைத்திருக்கின்றனர்.
 
எஸ்.வி.ஆர், வ.கீதா, கவிஞர்களான தேவ தேவன், அறிவுமதி, இன்குலாப், ராஜசுந்தரராஜன்,  பசுவையா, நகுலன், ஞானக்கூத்தன் முதற்கொண்டு ஜெயமோகன் போன்ற இளைய தலைமுறைப் படைப்பாளிகள் வளர சு.வி.யின் கவிதைகளை தமிழ்க்கவிதையின் புதிய வளமாகக் கருதுகிறார்கள். மலையாளம் மற்றும் சிங்கள மொழிகளில் கூட சு.வி.யின் கவிதைகள் பரிச்சயமடைந்திருக்கின்றன. ஆங்கிலத்திலும் பல கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
 
கடந்த மூன்றரைத் தசாப்தங்களாக தொடர்ச்சியாக சு.வி. எழுத்தியக்கத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அவர் என்றும் ஓய்ந்திருந்ததில்லை... அவருடைய மனமும் உடலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருந்தன. மனதையும் உடலையும்   ஒன்றாக அவர் கருதினார். அப்படியே வைத்திருந் தார். அவருடைய தியானத்திலும் இரண்டும் இணைந்திருந்தன. தன்னுடைய முதற் கவி தையை எழுதத்தொடங்கிய கணத்திலிருந்து தன்னுடைய இறுதிக் கணம் வரைக்கும் அவரு டைய பிரக்ஞை எழுத்தியக்கத்தில் இயங்கிக் கொண்டேயிருந்திருக்கிறது.
 
அவருடைய எழுத்தியக்கம் மானுட விடுதலையை விரும்புகிறது. பிரபஞ்சம் நோக்கிய  தாகத்தோடிருந்தது. அவர் பிரபஞ்ச ஒலியை மொழி பெயர்த்திருக்கிறார் என்பது ஒரு தடவை ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளதாக ஞாபகம். பிரபஞ்ச மொழியைப் புரிந்துகொள்ளும் வல்ல மையைப் பெற்றிருந்தார். சு.வி., ஜெயமோகன் சு.வி.யின் கவிதைகள் குறித்து விரிவாக ஒரு கட்டுரையை எழுதியுள்ளதாகவும் தகவல்.
 
தமிழில் சு.வி. அளவுக்கு விரிவும் ஆழமும் கூடிய படைப்பாளிகள் குறைவு என்று பலரும் சொல்லியுள்ளனர். அவர் தன்னுடைய ஊரை நேசித்த அளவுக்கு சகல நிலப்பரப்பிலும் பற்று டையவராக இருந்திருக்கிறார். எல்லா ஊரும் தனதூரே என்ற உணர்வு, எதையும் ஒன்றாகக் கருதும் ஞானம் அவருக்குள் வளர்ந்திருந்தது. எல்லாவற்றையும் தனக்குள்ளாக்கும் அகந்தை அல்ல அது. ஆக்கிரமிப்பின் விஷத்துளி அல்ல அது. சமனிலை காணும் உயர் நெறியது.
 
 à®…வர் கைவிடப்பட்ட தீவகத்தை துயர் தோய்ந்த அந்த அனல் வெளிகளை காற்றுவழிக் கிராமம் எனப்பாடினார். துயரொழுகத் துயரொழுகப்   பாடினார். ஆனால் கதறியழுவதற்காக அல்ல. கதியழுவதும் அல்ல. சிறைப்பட்டுச் சிதையும் அனாதரவான தீவுகளை அவர் காலத்தின் சாட்சியாக நின்று பாடினார். அதுவொரு காலத்துயர். தீராத்துயர். நெஞ்சில் கனலை மூட்டும் பெருந் துயரத்தீ.
சு.வி நன்றாகப் பாடுவார். நிலா நாளில், இரவில், அவரின் பாடல்கள் காற்றில் மேலெழுந்து வரும்போது இந்தப் பிரபஞ்சமே  கரைவது போலி ருக்கும். அதிலும் அவர் சிலப்பதிகாரத்தின் கானல் வரிப்பாடல்களை துயரொழுகப்பாடுவார். கண்ணில் கரையும் காவியகாலமும் பிரிந்து கொண்டேயிருக்கும் நமக்கு.
 
தன்னுடைய கவிதைகளையும் அவர் பாடிக் காட்டுவார். அந்தக் குரலுக்கு எப்படி அத்தனை ஈர்ப்புச்சக்தி இருக்கிறது என்று வியந்திருக்கிறேன். சு.வி.யின் பாடல்களைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அவர் எப்போதும் பாடுவார் என்றில்லை. ஆனால் எங்களுக்கு அவருடைய பாடலுக்கான தாகமிருக்கும். அது ஒரு தேவகுரல் என்று ஜெயசங்காரோ லம்போவோ சொன்னதாக நினைவு. உண்மைதான். அதிலும் அவர் நீல     வாணனின் " ஓ...ஓ வண்டிக்காரா..." வைப் பாடும்போது கேட்க வேணுமே! அப்பப்பா...
 
சு.வி எப்போது  வந்தாலும் அவரை எப்படியும் பாடவைக்கவேணும் என்று ஆசை மேலெழும். சில போது தவறிப்போனாலும் அநேகமான சந்தர்ப்பங்களில் அவர் பாடியிருக்கிறார். தனக்காகத்தான் பாடுகிறாரா? அல்லது எங்களுக்காகத்தான் பாடுகிறாரா என்று தெரியாமல் இருக்கும். இப்போதும் அவர் யாருக்காகப் பாடினாரோ என்றே தெரியாமலிருக்கிறது.
 
சு.விக்கு பிரபஞ்சம் மேலிருந்த பற்றளவுக்கு சூழல் மீது கரிசனையும் இருந்தது. அடிப்படையில் அவர் ஒரு சூழலியலாளர் அவர் 'சூழியல்' என்று சுழலியவைச் சுருக்கிப் புதுச் சொல்லாக்கியிருந்தார்.
 
திருகோணமலையில் அகதியாகக் குடியேறியிருந்த நாட்களில் கூடுதலான ஈடுபாட்டோடு சூழியலில் கவனங்கொண்டு செயற்பட்டார். சூழியல் குறித்து நிறைய எழுதினார். அவர் எழுதிக் கொண்டேயிருந்தார். புதிய வடிவங்களை நோக்கி சு.வி நகரத் தொடங்கினார். பின்னாளில் அவர் தீவிரமாவும் ஓய்வின்றியும் அதிகமாக எழுதினார்.
 
சுனாமி அவருடைய பல கையெழுத்துப் பிரதிகளை அழித்துவிட்டது. சுனாமியின் போதும் அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால்   அவர் சோர்ந்து விடவோ தளர்ந்துவிடவோ இல்லை. அவருக்குள்ளிருந்த தைரியம் அவரை இயக்கிக் கொண்டேயிருந்தது. அவருடலை நோய் தாக்கிச் சிதைத்துக் கொண்டேயிருந்த போதும் அவர் தொடர்ச்சியறாமல் இயக்கிக் கொண்டேயிருந்தார் இறுதியாக அவர் வாசிப்புத் தொடர்பான மாணவர்களுக்கு வழியாகட்டியான சிறிய நூல் ஒன்றைக் கூட வெளியிட்டிருந்தார்.
 
1966 ஆம் ஆண்டிலிருந்து 1992 ஆம் ஆண்டு வரை பசித்தவர்களுக்கு தானம் வழங்கியதை அவருடையது. புங்குதீவு சர்வ மத ஆச்சிரமத்தினோடு தொண்டாக அரிசி வழங்கினார். வாழ்வு முழுக்க அவர் தொண்டு செய்தார். எல்லாவகையிலும் தொண்டுகள் செய்தார்.
 
இப்படியெல்லாமிருந்த சு.வி. என்ற அன்பாளன் இன்றில்லை. அவரை இழந்துவிட்டோம். அவரை இழக்கப்போகிறேன் என்ற முன்னறிப்பாகவா அவருடைய அந்தப் புத்தகம் தவறியது?
லம்போ சொன்னதைப் போல" அளவற்ற அன்பாளனாக" இருந்த சு.வி.யை இழந்து விட்டோம்.
 
அவருடைய பாடல்களை ஒலிப்பதிவு செய்யும் படி பத்மாநாப ஐயர் பல தடவை கேட்டிருக்கிறார். கொழும்பில் அதற்கான ஏற்பாட்டையும் செய்திருந்தேன் என்ற போதும் அவருடைய பயணத்துக்கும் ஏற்பாட்டாளர்களுக்குமிடையில் நடந்த நேரப் பொருத்தமின்மையால் அது சாத்தியமாகவில்லை. இனி அதைச் செய்வதற்கும் சாத்தியமில்லை. சு.வி எல்லாவற்றையும் கடந்து விட்டார். நிலாந்தன் சொல்லுவது போல அவர் ஒரு காலப்பயணியாகவே சென்றுவிட்டார்.
 
"வில்வன் போய்விட்டான். இனி ஆத்மார்த்தமாகப் பேசுவதற்கு எனக்கு யாரிருக்கிறார் " என்று மு.பொ துக்கம் தோய்ந்த குரலில் கேட்ட துயர் தான் நமது  நெஞ்சிலும் கிளம்புகிறது.
வில்வரெத்தினம் இல்லாத பிரபஞ்சம் இதுவா? 

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(3 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 13 Dec 2025 13:28
TamilNet
The JVP has recently lent itself to US efforts to consolidate the unitary state and realise its long-held ambition to capture state power in Colombo. In this regard, they have also engaged with a range of actors, from the IMF, Washington, and New Delhi, as well as attempted to woo Eezham Tamils and other Tamil-speaking people to opt for the NPP in the 2024 SL Presidential Elections. Norway-based Eezham Tamil anthropology scholar Dr Athithan Jayapalan writes that the NPP and Lionel Bopage speak of equality without addressing the right of an oppressed nation to secession in the face of national oppression and genocide. Instead, the NPP, aligned with the US position, vows to neutralise the Eezham Tamil political struggle for self-determination.
Sri Lanka: JVP always denied Eezham Tamils?inalienable self-determination: Anthropology scholar


BBC: உலகச் செய்திகள்
Sat, 13 Dec 2025 12:56


புதினம்
Sat, 13 Dec 2025 13:09