அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 35 arrow விடுதலையின் விரிதளங்கள் - 02
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


விடுதலையின் விரிதளங்கள் - 02   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பரணி கிருஷ்ணரஜனி  
Friday, 25 May 2007

விடுதலையின் விரிதளங்களும்,
வாழ்வின் புதிரான முடிச்சுகளும்.

02.

அன்ரன் பாலசிங்கம், இந்த  மனிதரை ஈழத்தமிழ்ச் சூழலுக்கு அறிமுகம் செய்ய முற்படுவதென்பது காகம் கறுப்பு என்று உரத்துச் சொல்வதற்கு ஒப்பானது.

அவர் ஒரு அற்புதமான மனிதர்.

தமிழீழத் தேச நிர்மாணிகளில் ஒரு முன்னோடி. தேசத்தின் மதியுரைஞர் - கோட்பாட்டாளர்.

தேசத்தை நிர்மாணிக்கும் அரசியல் உரையாடல் மேசைகளில் எதிரிகளே வியக்கும் வண்ணம் தெளிவான ஆங்கில உச்சரிப்புடன் சொற்களை லாவகமாக வளைத்துத் தர்க்கரீதியாகப் பேசி எதிர்த்தரப்பைத் திணறடிப்பவர்.

தமிழ்மக்களுடனான உரையாடலின்போது அரசியல் மட்டுமின்றி 'கள்ளு'க் குடிக்கிறது முதல் எதிரிகளுக்கான 'கட்டிப்பிடி வைத்தியம்' வரை  அவர்கள் மொழியிலேயே உரையாடும் வல்லமை பெற்றவர்.

கலகலப்பானவர் அதே சமயம் கண்டிப்பானவர் - கடும்  கோபக்காரர்.

அன்ரன் பாலசிங்கம் என்ற மனிதரின் பின்னாலுள்ள கோபம் ஒரு தேசத்தின் கோபம் - விடுதலைக்காக போராடும் ஒரு இனத்தின் கோபம் - தமது நியாயங்கள் மறுக்கப்பட்டதனாலும் தாம் அங்கீகரிக்கப்படாமல் தொடாந்து நிராகரிக்கப்படுவதனாலும் பிறக்கும் ஒரு இனத்தின் வலியிலிருந்து எழும் பெருங்கோபத்தை அவர் ஏதோ ஒரு வகையில் அடையாளப்படுத்திக் கொண்டேயிருந்தார்.

அதுதான் அவர் மறைந்த போது 'தேசத்தின் குரல்' ஆகியிருந்தார்.

அவர் கோபத்திற்கு ஆளானவர்களில் நானும் ஒருவன் என்பது தற்போது என் மனஉலகத்தை ஒரு ஆன்மீகதரிசனமாக அலங்காரம் செய்கிறது.

கோபம் என்பதன் பின்னாலுள்ள நியாயங்களை - அறங்களை மனித மனம் பல சமயங்களில் ஏற்க மறுப்பதுமட்டுமல்ல புரிந்து கொள்ளவும் மறுக்கிறது.

சக மனிதன் ஒருவனின் கோபத்தை என்று நாம் புரிந்து கொள்ள முற்படுகிறோமோ அன்றே மனித வாழ்வின் அர்த்தத்தையும் வாழ்வின் சாராம்சத்தையும்  புரிந்தவர்களாகிவிடுகிறோம்.

எனது வாழ்வின் ஒரு கட்டத்தில் எனது அதிநேசிப்புக்குரியவாகள் சிலர் மீது நான் கோபப்பட்டுக்கொண்டேயிருந்தேன்.

அதை அவர்கள் புரிந்து கொள்ளாத போது அது ஒரு கட்டத்தில் கூச்சலாக மாறியது.

அவர்கள் எதிர்கால வாழ்வின் பெரும் பகுதிமீது கவியப் போகும் இருளின் கனத்தை முன்னுணர்ந்தவனாக என் கூச்சல் பெருங்குரலெடுத்திருந்தது.

அந்தக் கூச்சலின் பின்னான அவர்கள் மீதான பேரன்பையும் பிரியத்தையும் ஆதங்கங்களையும் மட்டுமல்ல ஒரு அழகியல் ரீதியான வாழ்வை அவர்களுக்காக நான் கனவு காண்பதையும் அவர்கள் புரிய மறுத்தார்கள்.


அத்துடன் அவர்கள் எனது கூச்சலின் அசௌகர்யத்தை மட்டுமே உணரத்தலைப்பட்டார்கள். முடிவில் அதன் வழியே பயணம் செய்து தமது அழகான வாழ்வைச் சிதைத்தும் கொண்டார்கள்.

என்னை அவர்கள் நேசிக்காதபோதும் - புரிந்து கொள்ளாத போதும்  அவர்கள் எதிர்கால வாழ்வின் சூனியத்தை உணர்ந்து அவர்களுக்காகக் கண்ணீர் விடுவதை மட்டும் என்னால் நிறுத்தவே முடியவில்லை.

ஏன் இந்த அவலத்தை அவர்களால் முன்னுணர முடியாமல் போனது?

அவர்களை அதன் வழியே தொடர்ந்து நகர்த்தியது எது?

மீதமுள்ள வாழ்வை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்?

அன்பையும் பாசத்தையும் உணர விடாமல் அவர்களைத் தடுத்தது எது?

சக மனிதனின் கோபத்தின் பின்னான அறவியற்கேள்விகளை ஏன் அவர்களால் புரிய முடியவில்லை?

போன்ற ஆயிரமாயிரம் கேள்விகளை நான் "நான் யார்?" என்ற கேள்வியின் தொடர் கேள்விகளாய் சந்திக்க நேர்ந்தது.

என் தனி ஒருவனின் கேள்வி ஒரு கட்டத்தில் அவர்களிற்குரிய கேள்வியாகவும் மாறிப்போயிருந்தது. அந்தக் கட்டத்தில்தான் 'விடுதலையின்' தரிசனம் கிடைத்தது.

அந்தத் தரிசனத்தின் வழி எனக்கு  பேருண்மை ஒன்று புலனாகியது. இது எனது கேள்வி மட்டுமல்ல. எனது நேசிப்புக்குரியவர்களின் கேள்வியும் அல்ல. ஒட்டு மொத்த மனித சமுதாயத்தின் கேள்வி இது.

இந்த இடத்தில்தான் 'விடுதலை' என்ற நூலின் முக்கியத்துவத்தையும் கன பரிமாணத்தையும்  என்னால் முழுமையாக உணர முடிந்தது.

2003 ம் ஆண்டின் இறுதிப்பகுதியில்தான் 'விடுதலை' வெளியாகியிருந்தது.

அது வெளிவந்தபோது அதைத்தேடி வாங்கியவர்களில் நானும் ஒருவன்.

எனது பத்திரிகைப் பணியின் காரணமாகவும், அரசியற் செயற்பாட்டின் காரணமாகவும் அதைத் தேடிப்பிடித்து வாங்கினேன்.

ஏனெனில் 'விடுதலை' வெளியாவதற்கு முன்பே நண்பர்கள் மட்டத்தில் ஈழ- இந்திய உறவைப் பற்றித்தான்   அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதியிருப்பதாக ஒரு செய்தி உலா வந்துகொண்டிருந்தது.

அவர் குறித்த பொது மதிப்பீட்டின் காரணமாக ஏதோ ஒரு வகையில் அரசியலைத்தான் எழுதுவார் என்ற வகையில்  மனம் வேறெந்த சந்தேகங்களுக்கும் இடம் வைக்கவில்லை.

ஆனால் நூல் கைக்குக் கிடைத்தபோது மிஞ்சியது ஏமாற்றம்தான்.

அந்நூலை வாசித்தவர்களுக்குத் தெரியும் அது இரு வேறுபட்ட உள்ளடக்கங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதென்பது.

அதன் பெரும்பகுதி மனித விடுதலையை பல உலக ஆளுமைகளை முன்னிறுத்தி பல்வேறுபட்ட தத்துவங்களினூடாகவும் கோட்பாடுகளினூடாகவும் பேச விழைகிறது.

எஞ்சிய சிறுபகுதி தமிழீழத் தலைமைக்கும் இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் இடையிலான பரஸ்பர உரையாடல்களை - உரசல்களை ஒரு அனுபவப் பகிர்வாக சிறு விமர்சனங்களுடன் முன்வைக்கிறது.

இது முக்கிய வரலாற்றுப் பதிவாக இருந்தபோதிலும் அந்தப்பெரும் பகுதியுடன் ஒட்டாமல் துருத்திக் கொண்டு நிற்கிறது.

ஒரு வாசகனுக்கு இவ்விரு பகுதிகளையும் ஒரேமனநிலையில் எதிர் கொள்வதென்பதும் வாசிப்புக்குட்படுத்துவதென்பதும் சுலபமான ஒன்றல்ல.

இவ்விரு பகுதிகளையும் ஒன்றாக்கி வெளியிட்ட அன்ரன் பாலசிங்கத்தின் உத்தி எத்தகையது என்று இன்று வரை யோசித்துக்கொண்டிருக்கிறேன். 

நான் எழுதிக்கொண்டிருக்கும் சுயவரலாற்று நூலில் 'விடுதலை' நூல் குறித்த எனது அனுபவப் பகிர்வுகளில் ஈழ - இந்திய அரசியலைப் பேசும் இந்த சிறு பகுதி குறித்து ஒரு வரிகூட பதிவு செய்யவில்லை.

ஏனெனில் என்னை ஆகர்சித்திருப்பது அந்தத் தத்துவார்த்தப் பகுதிதான்.

ஆனால் ஆரம்பத்தில் எல்லோரையும் போல் நானும் நூலின் உள்ளடக்கம் குறித்து விசனம் அடைந்தது உண்மைதான்.

நல்ல திரைப்படம் என்று நம்பி திரையரங்கு சென்று ஒரு மோசமான படம் பார்த்த உணர்வை சக நண்பர்கள் பலரே (இவ்வளவிற்கும் அவர்களில் பெரும்பாலானவர்கள் படைப்பாளிகள்) வெளிப்படுத்தியிருந்தனர்.

சாதாரண மக்களின் நிலையைச் சொல்லவா வேண்டும்?

'விடுதலை' என்ற நூல் குறித்தான உள்ளடக்கமாகவும் விமர்சனமாகவும் வெகுஜன ஊடகங்களில் வெறும் 63 பக்கங்களில் சொல்லப்பட்ட அரசியலே முக்கியத்துவப்படுத்தப்பட்டன.

அந்த நூலின் மையமான  மனித விடுதலையை, மனித வாழ்வைப் பேசும் அந்தப் பெரும் பகுதி குழி தோண்டிப் புதைக்கப்பட்டது.

ஒருவருக்கு உணவைப் பரிமாறி விட்டு அதன் தரம் குறித்துக் கேட்டபோது, அவர் அறுசுவைகளையும் விட்டு உப்பைக் குறித்து மட்டும் பேசியதற்கு ஒப்பான அபத்தம் இது.

ஒரு விதத்தில் தமிழ்ச் சூழலின் அவலமும் கூட.

எனக்குத் தெரிந்த வகையில் இந்த நூல் குறித்து அதன் தத்துவார்த்த பகுதியை முன்வைத்து ஈழத்தமிழச் சூழலில் இதுவரை ஒரு சிறு குறிப்புக்கூட ஒருவராலும் வரையப்படவில்லை.

(விதி விலக்காக தமிழகத்தைச் சேர்ந்த பத்ரி சேஸாஸ்திரி என்பவரால் மட்டும் அவரது வலைப் பதிவில் ஒரு சிறு குறிப்பு எழுதப்பட்டுள்ளது)

ஒரு படைப்பாளியாக அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதிக் காலங்களில் இது ஒரு பெருங்கவலையாக அவரைப் பீடித்திருக்கும் என்றே நம்புகிறேன்.

ஏனெனில் ஒரு படைப்பாளிக்கு தன் படைப்பு குறித்த கருத்துக்கள் பரிமாறப்படவில்லை - விமர்சனங்கள் மேலெழவில்லை என்ற நிலை அவரையே நிராகரிப்பதற்கு ஒப்பான வலியைத்தரக்கூடியது.

உலகப் புகழ்பெற்ற நாவலான  'WUTHERING HEIGHTS' நாவலை எழுதிய பிரித்தானிய பெண் எழுத்தாளரான EMILY BRONTE தன் முதல் நூலை வெளியிட்டுவிட்டு - அந்த நூல் குறித்து எந்தவிதமான விமர்சனமும் முன்வைக்கப்படாதபோது தான் அடைந்த மனநிலையை ஒரு பத்திரிகைப் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

வெறுத்துப்போய் தற்கொலை செய்வது குறித்துச் சிந்தித்துக்கொண்டிருந்தபோது   உள்ளுர்ப்பத்திரிகை ஒன்று அவரது நூலை 'மோசமான படைப்பு' என்று ஒற்றை வரியில் விமர்சனம் செய்திருந்தது.

தனது தற்கொலை எண்ணம் போய் தனது 'WUTHERING HEIGHTS' நாவலுக்கு அடித்தளம் இட்டதே அந்த விமாசனம்தான் என்று குறிப்பிடுகிறார் அவர்.

அன்றிலிருந்துதான் தான் நிம்மதியாகத் தூங்க முடிந்ததாகவும் குறிப்பிடுகிறாhர்.

தனது படைப்பு சரியான அர்த்தத்தில் ஈழத்தமிழ்ச் சமுகத்தால் சரியாக உள்வாங்கப்படாதது குறித்து அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எத்தகைய மனநிலையில் இருந்திருப்பார் என்பதை மேற்குறிப்பிட்ட நிகழ்வினூடாக புரிந்து கொள்ளலாம்.

அன்ரன் பாலசிங்கம் அவர்களிற்கே இத்தகைய நிலை என்றால் மற்றைய படைப்பாளிகளின் நிலை கற்பனைக்கே எட்டாத கோரமாக மனதில் விரிகிறது.

இது ஈழத்தமிழ்ச் சமுகத்தின் சிந்தனை வறுமையா?

தத்துவ வறுமையா?

இந்த நிலையை நாம் எந்த வகைமைக்குள் பொருத்திப் பார்ப்பது என்று புரியவில்லை. 

இத்தகைய வறுமைக் கோட்டிற்குக் கீழ்தான் நானும் இருந்திருக்கிறேன் என்பதை இப்போது நினைத்தால் அவமானமாக இருக்கிறது.

விடுதலையை நான் நெருங்க வழி செய்தது என் வாழ்வில் நடந்த விசித்திரமான தொடர் நிகழ்வுகளும் அதன் தொடர்ச்சியாக நான் சந்தித்த அகவுலகக் கேள்விகளும்தான்.

எல்லோருக்கும் இத்தகைய அனுபவங்கள் சாத்தியம்தானா? ஏன் விடுதலைக்காகப் போராடும் இனம் ஒன்றிற்கான அனுபவங்கள்  'விடுதலையை' நெருங்குவதற்கான சாத்தியங்களை உருவாக்கவில்லை. இது ஒரு மிக முக்கியமான கேள்வி.

போராடும் ஒரு இனம் ஒன்று தன்னை பல தளங்களிலும் கட்டியெழுப்ப வேண்டிய நிலையிலுள்ளது.

'விடுதலை' என்ற சொல்லிற்கு பல பரிமாணங்கள் இருக்கின்றன.

ஆயுதப் போராட்டம் மட்டும் ஒரு இனத்தின் விடுதலையைத் தீர்மானித்து விடாது.

ஒவ்வொரு தனிமனிதனின் விடுதலையும்தமான் ஒட்டுமொத்த சமுகத்தின் விடுதலையாக மாறும்.

இதை எப்படி போராடும் இனமாகிய நாம் மறந்தோம்?

அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 'விடுதலையில்' ஜிட்டு கிருஸ்ணமுர்த்தி அவர்களை அறிமுகம் செய்யும் பொழுது அவரிலிருந்து வெளிப்பட்ட முதன்மைத் தத்துவமாக குறிப்பிடுவது என்னவெனில்

"சமுதாயப் புரட்சியானது தனி மனிதனிலிருந்து தனிமனிதனின் உள்ளீட்டான அகவுலகப் புரட்சியாக ஆரம்பிக்கப்பட வேண்டும். தனிமனிதனின் உள்ளீட்டான புரட்சி நிகழாமல் மனவமைப்பு மாற்றப்படாமல்  தனிமனிதனுக்குப் புறம்பாக வெளியே நிகழும் எவ்வித புதுமையான சமுகப் புரட்சியும் உள்ளடக்கத்தில் உயிரற்றதாகவே இருக்கும். உயிர்த்துடிப்புள்ளதும் காலத்தால் சிதைந்து போகாததுமான ஒரு புதிய சமுக வடிவத்தைக் கட்டி எழுப்புவதாயின் தனி மனிதனின் மனவரங்கில் ஒரு புரட்சி நிகழ்வது அவசியம்" என்கிறார்.

தன் இறுதிக் காலங்களில் மரணப் படுக்கையில் இருந்தபடி நேரில் சந்தித்த சில நண்பர்களிடம்

"எமது ஈழத்தமிழ்ச் சமுகம் இறுகி இயக்கமற்று கெட்டிப்போயிருக்கிறது. அதுதான் விடுதலை மீதான நம்பிக்கையீனங்களும், துரோகங்களும் என்று அல்லற்படுகிறது. மரபான சில சமுகத் தளைகளிலிருந்து அது தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும். விடுதலை பற்றிய கருத்தியலை பல தளங்களிலும் வளர்த்தெடுக்கவேண்டும். இதை யார் செய்யப் போகிறார்களோ தெரியவில்லை" என்று சொல்லிப் புலம்பியிருக்கிறார்.

தனது 'விடுதலை' நூல் கவனிக்கப்படாததை அதற்கான ஆதாரமாகச் சுட்டிப் பேசியிருக்கிறார்.

நான் 'விடுதலை'யிலிருந்து நிறையப் பாடங்களைக் கற்றிருக்கிறேன்.

அதில் முதன்மையானது எனது தனிமனித விடுதலை சார்ந்தது. அத்துடன் என்னை நானே எழுதுவது தொடர்பானது.

அண்மையில் எனது எழுத்துக்களைத் தொடர்ச்சியாகக் கவனித்து வரும் ஒரு  பேராசிரியர் (இதில் வெளியாக வராததுதான் ஏராளம். ஒரே நேரத்தில் பல தளங்களில் எழுதிக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலானவற்றில் என்னை நானே கேலிசெய்து ஒரு அபத்த மனிதனாக என் வாழ்வை அப்பட்டமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். அவை குறித்தும் அவருக்குத் தெரியும்) இந்தளவிற்கு அகவயமாக எழுதத்ததான் வேண்டுமா என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.

நான் ஒற்றை சொல்லில் பதில் சொன்னேன். அது 'விடுதலை'.

என்னை எழுதுவதற்கூடாகத்தான் என்னை நான் விடுவித்துக்கொள்ள முடியும்.

என்னை நான் முழுமையாக விமர்சனம் செய்யும் நிலையை என்று அடைகிறேனோ அன்றுதான் மற்றவர்கள் குறித்து எழுதவும் விமர்சனம் செய்யவும் தகுதியானவனாகிறேன்.

'விடுதலை' இது குறித்துத்தான் உரத்த குரலில் பேசுகிறது. எனக்கு ஒன்று புரியவில்லை. ஏகப்பட்ட அனுபவங்கள் என்னைச்சுற்றி இருக்கும் போது நான் ஏன் வெளியிலிருந்து அனுபவங்களைப் பெற்று எழுத வேண்டும்.

என்னிலிருந்தே எல்லா விமர்சனங்களையும் தொடங்க ஆசைப்படுகிறேன். ஏனெனில் நான் இந்த சமுகத்தின் ஒரு அங்கம். ஆகவே என்னைப்பற்றி எழுதுவதெனபது ஒரு வகையில் இந்த சமுகத்தைப்பற்றி எழுதுவதாகிறது. வேறு ஒரு வகையில் எனது எழுத்துக்கள் நான் வாழும் காலத்தின் அடையாளமாகிறது.

எனது மனைவி எனக்குச் சுட்டுத்தந்த வடை இருக்கும்போது - அது குறித்த கதைகளைக் சொல்லாமல் பாட்டி வடை சுட்ட கதையைச் சொன்னால் எவ்வளவு அபத்தமோ அத்தகையது மேற்குறித்த பேராசிரியரின் வாதம்.

"நான் யார்?" என்ற எனது தேடலின் முடிவாய் 'விடுதலை' யினூடக எனக்குக் கிடைத்த உண்மை  "நான் என்பது பொய்". "நான்" என்ற ஒன்றே இந்த உலகத்தில் கிடையாது.

"நான்"  என்பது பொய் என்றால், எனது பிரக்ஞையின் பிரமை என்றால், எனது மனவுலகம் சிருஸ்டிக்கும் மாயை என்றால், "நான்" என்று எனக்குள்ளிருந்து சிந்திப்பவனாக, உணர்பவனாக, உணாச்சி வயப்படுபவனாக, ஆசைப்படுபவனாக, நானாக என்னை இயக்கி வரும் அந்தப் பிரகிருதி யார்? என்ற கேள்வி மேலெழும்புகிறதல்லவா?

அன்ரன் பாலசிங்கம் சொல்கிறாhர் "அது, நான் என்பது ஒரு எண்ணம். எண்ணவோட்டத்தின் நெற்றிக்கண்ணாக அமையப்பெறும் ஒரு எண்ணம். மனவுலகம் உள்வாங்கிக்கொள்ளும் கோடானு கோடி எண்ணப் படிமங்களின் மையப் படிமமாக "நான்" என்ற சுயம் எழுகிறது." என்கிறார்.

இதை ஒரு மனிதன் என்றைக்கு அழித்துக் கொள்கிறானோ அன்றே அவன் சுதந்திரமான மனிதனாக தன்னிலிருந்தே தன்னை விடுவித்துக்கொண்ட மனிதனாக புத்துயிர்ப்பு பெறுகிறான் என்பதை "விடுதலை" தீவிரமாகப் பேச முயல்கிறது.

அன்ரன் பாலசிங்கம் சொல்கிறார் " முதலில் உன்னை நீ எழுது. பிறகு என்னை எழுது. அது ஒரு கட்டத்தில் இந்த சமுதாயத்தை எழுதியதாக முடியும்" என்கிறார்.

மனித வாழ்விற்கும் மனித விசாரணைக்குமான ஆரம்பப் புள்ளி அங்கிருந்துதான் தொடங்குகிறது என்றும் கூறுகிறார்.

இதை அவர் வெளியாக எங்கும் முன்வைக்கவில்லை.  பல உலக ஆளுமைகளை முன்னிறுத்தி பல்வேறுபட்ட தத்துவங்களினூடாகவும் கோட்பாடுகளினூடாகவும்
உரத்துப்பேசும் விடயம் இதுதான்.

அமெரிக்காவிலிருந்து வேறு ஒரு நண்பர் தொலைபேசி எடுத்துக் கேட்டார். "நீ என்ன உன்னை அன்ரன் பாலசிங்கம் என்கிறாhய். விடுதலையை தொடர்ந்து எழுதுவேன் என்கிறாய்" என்று கேட்டார். நான் அதிர்ச்சியடையவில்லை. எதிர்பார்த்ததுதான்.

அந்த வரிகளினூடாக நான் முன்வைத்த தத்துவம்,  நான் என்ற அகந்தை அழியும் ஒரு மனிதக் கோட்பாடு.

அதன் வழி தொடர்ந்து நோக்கினால் அவரும் அன்ரன் பாலசிங்கம்தான்.

'விடுதலை'யைச் சரியாக உள்வாங்கிய எல்லோரும் அன்ரன் பாலசிங்கம் என்ற மனிதரின் பிரதிகள்தான்.

அவர்  'விடுதலை'யின் வழி விரும்பியதும் அதுதான்.

'விடுதலை'யை தொடர்ந்து எழுத முடியாது என்பது எத்தகைய அபத்தம் நிறைந்த வாதம்.

இது ஒரு வகையில் அன்ரன் பாலசிங்கம் என்ற மனிதரின்  தத்துவத்தையே மறுதலிப்பதாகும்.

உண்மையைச் சொல்லப் போனால் 'விடுதலை' நூலில் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எந்தவிதமான புதிய தத்துவங்கள் எதையும் போதிக்கவும் இல்லை புகுத்தவும் இல்லை.

ஈழத்தமிழச் சூழலுக்கு ஏற்றவகையில் மனித வாழ்வு, மனித விடுதலை குறித்த சில அடிப்படைத் தத்துவங்களை மிகச் சிறிய அளவில் அறிமுகம் செய்யும் ஒரு கையேடு என்ற அளவிலேயே இதன் முக்கியத்துவம் உணரப்படுகிறது.

உண்மையில் 'விடுதலை' இனித்தான் எழுதப்படவேண்டும்.

ஒருவர் விடுதலையை நெருங்குவதென்பதையும், மறுவாசிப்புக்கு உட்படுத்துவதென்பதையும் அன்ரன் பாலசிங்கம் என்ற தனி மனிதருடன் போட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது - குறிப்பாக, ஈழ அரசியலில் அவருக்குரிய இடத்தையும் இருப்பையும்....

ஈழ அரசியலில் அவருடைய இடம் இட்டு நிரப்பப்படமுடியாதது. அது அவருக்கேயுரிய இடம் - அதை யாராலும் மீறவும் முடியாது.

ஆனால் விடுதலையின் வழி வெளிப்படும் பாலசிங்கம் என்ற மனிதரை இலகுவாகப் பின்தொடர முடியும்.

ஏன் மீறவும் முடியும்.

பாலசிங்கம் என்ற மனிதர்  விடுதலையின் வழி வாசகனிடம் கோருவதும் அதைத்தான்.

விடுதலையின் ஒவ்வொரு பக்கங்களும் உரத்துப் பேசும் விடயம் இது. அரசியல் வேறு தத்துவம் வேறு இரண்டையும் ஒரு சேர எதிர்கொள்வதென்பது சில அபத்தங்களுக்குத்தான் வழி வகுக்கும்.

அதன் நீட்சிதான் அந்த நண்பருடைய வாதம். பலரால் விடுதலையை நெருங்கமுடியாதற்கான மிகமுக்கியமான காரணமாக இதை நான் பார்க்கிறேன்.

தனது அரசியல் அடையாளங்களைக் களைந்து விட்டு ஒரு சாதாரண மனிதனாகத்தான் விடுதலையை அவர் எழுதியிருப்பதை விடுதலையை நோமையாக எதிர் கொண்ட ஒவ்வொருவராலும் மிக இலகுவாக உணர முடியும்.

'விடுதலை'யின் சில இடங்களில் அன்ரன் பாலசிங்கம் தன்னை பூக்கோவாகவும், சர்த்தாராகவும் கற்பனை செய்து சில கருத்துருவாக்கங்களை பேச முயல்கிறார்.

இதற்காக அன்ரன் பாலசிங்கம் என்ன பூக்கோவா? சர்த்தாரா? இல்லை, அவர் அவர்களின் தொடர்ச்சி அவ்வளவே...

என்னிடம் இதைக் கேட்ட நண்பர்  ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர். ஈழத் தமிழ்ச் சூழலில் அறிவுஜீவிகள் மட்டத்திலேயே எவ்வளவு அறியாமைகள் - தத்துவ வறுமைகள்...

இதன் வழி தெரிவதெல்லாம் ஒன்றுதான். ஈழத்தமிழ்ச் சமுகம் அதன் விடுதலை சார்ந்து கடக்க வேண்டிய பாதை நீண்ட நெடியது.....

தொடரும்...

கட்டுரையாளருடனான தொடர்புக்கு: parani@hotmail.com

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(3 posts)

 


 


மேலும் சில...
விடுதலையின் விரிதளங்கள் - 01
விடுதலையின் விரிதளங்கள் - 03
விடுதலையின் விரிதளங்கள் - 04
விடுதலையின் விரிதளங்கள் - 05
விடுதலையின் விரிதளங்கள் - 06

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 29 Mar 2024 11:21
TamilNet
HASH(0x557291c11858)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 29 Mar 2024 11:21


புதினம்
Fri, 29 Mar 2024 11:21
















     இதுவரை:  24716124 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4430 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com