அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 38 arrow மரணத்தின் வாசனை - 06
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மரணத்தின் வாசனை - 06   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: த.அகிலன்  
Tuesday, 07 August 2007

ஒருத்தீ……..

1.
மரணம் எப்படி அறிவிக்கப்படுகிறது. திடீரென்று ஒரு அதிகாலைத் தொலைபேசி அழைப்பில் வெகு நிதானமாகத் தொடங்கும் உரையாடலின் இரண்டாவது மூன்றாவது இழையில் மரணம் குறித்தான சேதி சொல்லப்படும். அது சொல்லப்படும் உறவுகளின் நெருக்கம் குறித்து இருக்கிறது. கேட்பவருக்கு செத்துப்போனவர் யார்? என்பதில் அந்த உரையாடலின் தொனி இருக்கும். அல்லது கேட்பவரின் உடல்நிலை மனநிலை இரண்டையும் கவனத்தில் வைத்தும் அது அறிவிக்கப்படுகிற தொனி இருக்கும்.

எனக்கு ஒரு மரணம் அறிவிக்கப்பட்டது? மின்னஞ்சல் வழியாக? ஒதோ ஒரு இணையதளத்தின் செய்தியில் இருந்து எடுத்து இரண்டு வரிகள் ஒட்டப்பட்டட மின்னஞ்சலில் மீந்திருந்த கேள்வி இது அவளா?.. அவள்தாள் ஊர் பேர் எல்லாம் அவளுடையதாயிருக்கும் போது அவளில்லாமல் எப்படியிருக்க முடியும்? அவள் இல்லாமல் போய்விட்டாள் ஆனாலும் இது அவள்தான். இப்போதெல்லாம் செய்திகளில் எந்தவிதமான அதிர்ச்சிகளிற்கும் தயாரான மனநிலையில் படிக்கவேண்டியிருக்கிறது. செய்தியின் எந்த இழையில் வேண்டுமானாலும் மிகச்சாதாரணமாக ரணங்கள் விநியோகிக்கப்படலாம். செய்திகளைப் படிக்காமலிருக்கலாம் என்றும் தோன்றுவதுண்டு. நினைவுகளையும் என்னையும் இணைத்துக்கொண்டிருப்பவை செய்திகள், செய்திகள் மட்டுமே. இந்த மரணம் எனக்குள் அதிர்ச்சிகளை கிளப்பி விட்டது என்றெல்லாம் இல்லை. ஆனாலும் ஒரு செய்தியாய் அதைக்கடந்து போய்விடமுடியவில்லை… ஓரத்தில் துளிர்க்கிற ஒரு துளிக்கண்ணீரை … கைக்குட்டைக்கு கொடுத்து விட்டு நிமிரவேண்டியிருக்கிறது.. மரணங்கள் வெறும் எண்ணிக்கைகளாய் செய்தியாய் மட்டும் கடந்து போய்விடுகிற மரத்துப்போன ஒரு சூழலுக்கு நாங்கள் வந்துவிட்டோம் என்று தோன்றுகிறது.

அவள் செத்துப்போன அம்மம்மாவின் பிரியத்துக்குரிய பேத்தி. ஐந்து சகோதரிகளில் மூத்தவள். ஒரு கோபக்கார அப்பாவிற்கும் அவருக்கு அடங்குவதைத் தவிரவேறெதையும் அறியாத அம்மாவிற்கும் பிறந்த அப்பாவி இரட்டைக்குழந்தைகளில் மூத்தவள். 'அவள் ஆம்பிளையைப்போல..' அவளது அப்பா அடிக்கடி சொல்லிக்கொள்ளுவார். அவள் அப்படித்தான் மாடு மாதிரி வேலை செய்வாள். அவளிடம் ரகசியமாக எல்லோரின் இதயத்தையும் வென்றுவிடுகிற அன்பு இருந்தது. அவள் எப்போதும் எதையாவதைச் செய்து கொணடேயிருப்பாள். வேலை, வேலை செய்வது மட்டும் தான் அவளுக்குப் பொழுது போக்கு. படிப்பு ஏறாத ஒரு மொக்குப்பெட்டை அவள்…

இறந்தபிறகு எல்லோரும் ஒருவரைக் கொண்டாடுவது என்பது வழமையானது. ஆனால் இது இறந்த பிறகான ஒரு கொண்டாட்டமாக அல்லது புகழ்ச்சியாக இல்லை. இறந்தபிறகு எல்லோரும் புகழப்படுகிறார்கள் சகமனிதர்களிடம் இல்லாத ஒரு  நற்குணம் அவர்களிடம் இருந்ததாய்ப் படும் எங்களுக்கு அவர்களது இறப்பின் பின்னால்.

எனக்கு ஞாபகம் இருக்கிறது ஒருக்கா முத்தவெளி விளையாட்டுப் போட்டிகளை வேடிக்கை பார்க்க போன போது அவள் வாங்கித் தந்த கோன் ஜஸ் கிரீம். இப்போதும் றோஸ் நிறத்தோடு கோண் குழியினையும மீறி என்கைகளில் வழிந்து குளிர்ந்து கொண்டிருப்பது  போல இருக்கிறது. ஈரம் உதிர்ந்த கைகளைத் துடைத்துக்கொண்டேன். அப்போதெல்லாம் வீடுகளில்  திருவிழாக்களுக்கோ விளையாட்டுப்போட்டிக்கோ போகும்போதுதான்  கையில காசு தருவாங்கள். அதுவும் ஏதோ கத்தையா இல்லை குத்தியா ஒரு 5 ரூபா தருவாங்கள். ஒரு ஐஸ்பழம் 5 ரூபா அதோடு எங்கள் கனவுகளை முடித்துக் கொண்டு  விடவேண்டும். அப்படி எல்லாரும் ஐஸ்பழத்தை வாங்கி அவசரப்பட்டு குடிச்சிட்டு மற்றாக்களை வாய்பார்த்துக் கொண்டிருப்போம். அப்போது யாரேனும் இன்னொரு ஜஸ்பழத்துக்கு பதிலாக கோன் வாங்கித்தந்தா எப்படி இருக்கும். ஆனால் அப்படியான இன்ப அதிர்ச்சி தரும் வேலைகளை அடிக்கடி செய்வாள் இவள். ஒரு பொறுப்பான ஆளைப்போல அக்கறையுடன் என்னைப் பார்த்த உடன் தனக்கிருக்கிற அஞ்சு ரூபாயையும் எனக்கு தந்து நீ கோன் வாங்கிக் குடி என்று சொல்லியிருக்கிறாள். நான் ஒரு போதும் உனக்கு?..... என்கிற கேள்விளை கேட்தேயில்லை. பேசாமல் என்ரை அலுவல் முடிஞ்சா சரி என்பது மாதிரி காசை வாங்கிக்கொண்டு போய்க்கொண்டேயிருப்பேன். கேட்டிருக்கலாமோ என்ற தோன்றுகிறது இப்போது.. அந்தக் கூட்டத்திற்குள் விளையாட்டை வேடிக்கை பார்க்கிறோமோ இல்லையோ, திருவிழாவில் தேரிழுக்கிறதைப் பார்க்கிறமோ இல்லையோ இவள்  வந்திருக்கிறாளா எண்டு பார்ப்போம் அடுத்த கட்ட கோன் ஜஸ் கிரீமிற்காக.

சின்ன வயதுகளில் கனகாம்பிகைக் குளத்து வயல்வெளிகளிற்கு மாடுமேய்க்க போவாள். எல்லாரும் தான் போவோம். எங்கட வீட்டை மாடுகள் கிடையாது.  ஆனாலும் அவளது வீட்டில் நிறைய மாடுகள் நிண்டன. லச்சுமி எண்டொரு மாடு அவளுக்கு மிகவும் நெருக்கமாயிருந்தது. அதனோடு பேசிக்கொணடேயிருப்பாள் அவள். அது அவள் பக்கத்தில நிண்டா மட்டும் தான் பால் கறக்கவிடும். பெரியம்மா வீட்டையும் மாடுகள் நிண்டன சனி ஞாயிறுகளில் நானும் சின்னக்காவும் பெரியண்ணாவும் அவளும் மாடு மேய்க்கபோவதுண்டு. அம்மா என்னை படிக்கவில்லை என்று பேசும் போது மட்டும் உன்னை மாடு மேய்க்கத்தான் அனுப்போணும் எண்டு ஆனா பிறகு சனிக்கிழமை இவேளோடு நானும் போகட்டா எண்டு கேட்டா அனுப்பமாட்டா அப்ப இவள்தான் எனக்கு அம்மாவிடம் சிபாரிசு பண்ணி கூட்டிக்கொண்டு போவாள். எப்பவாச்சும் என்னுடைய சக்கை குழப்படிகள் அம்மாவின் கைகளில் பூவரசம் குச்சிகளாய் மாறுகிறபோது காப்பாற்றியது இரண்டு பேர் ஒன்று இவள் மற்றது பெரியக்கா… மாடுமேய்க்கப்போவது எனக்கு ஒரு விளையாட்டு மாடுகளைப் பற்றி எனக்கொரு கவலையும் இருந்ததில்லை. எனக்கு மாடுகள் மேயுற வயல், ஓடுகிற கன்றுக்குட்டிகள், தண்ணி ஓடுகிற வாய்க்கால், படுக்க முடிகிற புல்வெளி, வண்ணாத்தப்பூச்சி தத்துவெட்டி,அதைவிட மேலாகவும் பள்ளிக்கூடத்திற்கு லீவென்று மகிழ்ச்சி இவ்வளவுக்காகவும் தான் நான் அவேளோடு போகப்போகிறன எண்டு அடம்பிடித்து போவன். 

சின்னக்கா நல்லா வண்ணாத்தி பிடிப்பா. ஆனா சின்னக்காவை விட வயல்களின் ரகசியம் அறிந்தவளாய் இருந்தாள் அவள். எங்கே வீரப்பழம் இருக்கு எங்கே நாவல் பழம் இருக்கு பூனைப்புடுக்குப்பழம் எங்கே படர்ந்திருக்கு எல்லாம் அவளுக்குத்தான் தெரியும். வயலின் ரகசியங்கள் அவளுக்குத் தெரிந்திருந்தது வரம்புகளில் இருந்து குதிக்கிற தவளைகளோடு பேசியபடி வயலின் ரகசியங்கள் தேடி விரைவாள். எல்லாவற்றையம் கடந்து ஓடகிற என்னை எங்கெங்கே பாம்புகள் இருக்கும் எனத் தெரிந்து இழுத்து நிறுத்துகிற சாகசக்காரி அவள். ரகசியங்களை விரித்து வைத்து நாவில் சுவைக்கிறபோது இருக்கிற மகிழ்ச்சி சொல்லமுடியாதது. மரங்கள் அவளுக்கு தோழிகள் போல மிகச் சாதாரணமாக ஏறுவாள். மாடுமேய்த்து விட்டு வரும் வழியில் முருகுப்பிள்ளைச் ரீச்சரின் வளவுக்குள் இருக்கும் ஜம்பு மரத்தில் ஏறி ரீச்சர் துரத்திக்கொண்டு வருவதற்கிடையில் படபடவென காய்கள் சொரிய குலைநிறையக் காய்களோடு ஒடிவரும் தைரியம் வேறு யாருக்கும் கிடையாது. நல்லா எனக்கு பெரிய காய் வேணுமெண்டு அடம்பிடிக்கிற தைரியம் என்னை விடயாருக்கும் கிடையாது. நிறைய தடைவைகளில் அவள் ஆம்பிளை மாதிரி என்று எல்லாரும் சொல்வதற்கு பொம்புளைப்பிள்ளையான அவள் மரத்தில் ஏறவதுதான் காரணம் என்றாகிற்று. அம்மம்மா அவளை இதற்காகவே நிறையப்பேசுவா பார் பொடியள் மாதிரி கொப்புத்தாவித் திரியுறாள் என்று. ஆனால் அவள் அநாயாசமாக ஏறுவாள். வீரைப்பழங்களின் உருசி நாவில் உந்தித்தள்ள அவள் கொப்புகளை  முறித்துக் கீழே போட்டபடியிருப்பாள். பற்கள் மஞ்சளடித்துப்போகும் வரை தின்றபடியிருப்போம். அவள் அப்படித்தான் மற்றவர்களுக்காக அல்லது மற்வர்களின் புன்னகையில்  அவள் மகிழ்ந்து கொண்டிருந்தாள்.

ஒரு முறை நாங்கள் மாடுகளை மேயவிட்டு வயல்களில் அலைகையில் இரண்டு மாடுகள் அப்படியே கொம்புகளைப் பிணைத்துக்கொண்டு மூர்க்கமாக மோதிக்கொண்டன. ஒரு மாட்டின் தலையில் நிறைய ரத்தம் வந்துகொண்டேயிருந்தது. நான் முதல்முதலாக அந்த மாட்டுச் சண்டையைப் பார்த்தேன். மூர்க்கமான ஒரு மோதல். மாடுமேய்க்கும் கதைகளில் மாடுகள் இப்படி கொம்புகளைக் கொழுவிக்கொண்டபின் ஒரு மாடு சாகும் வரைக்கும் மற்ற மாடு விடாது  என்கிற கதைகள் மலிந்திருந்தன அவள் தான் அதையம் எனக்குச் சொல்லியிருந்தாள். அதையும் மீறி யாரேனும் பிரிக்க முயற்சித்தால் அவர்களின் கதி அதோகதிதான். ஆனால் அன்றைக்கு அவள் 'அய்யொ பாவம் இந்த மாடுகள்' என்றபடி அந்தமாடுகளை பிரித்துவிட்டுத்தான் வருவேன் என்று தடியெடுத்து அந்த மாடுகளை அடித்து கொம்புகளினிடையில் தடியை ஓட்டி என்னென்னவோ செய்து பிரித்து விட்டுத்தான் வந்தாள். நாங்கள் எல்லோரும் ஓடிப்போய் ஒரு மரத்துக்குப்பின்னால ஒளிஞ்சிருந்து பார்த்துக்கொண்டிருந்தோம். மாடுகள் கொம்புகளால் அவளைக்கிழிக்க போகின்றன என நினைத்துக்கொண்டு.. அவள் ஒரு ஜான்சிராணியைப்போல வந்து கொண்டிருந்தாள் எதுவுமே ஆகாமல். பிறகு எல்லோரும் வீட்டை போனாப்பிறகு நான் நடந்ததைப் போட்டுக்கொடுக்கிறேன் எனத் தெரியாமல் பெரிய புழுகமாகப் போட்டுக் கொடுக்க நடந்தது அவளுக்கு அகப்பைக்காம்புப் பூசை. 

அடுத்த நாளில் இருந்து  அவள் வெளியில் வருவதேயில்லை. நான் நினைச்சன் ஏதோ கோபம் போல நான் வீட்டை வந்து சொல்லிப்போட்டன் எண்டு… நான் அவர்களின் வீட்டை போகேக்க அவள் ஒரு அறைக்குள் இருந்தாள். எனக்குப் புதினமாக்கிடந்தது. என்னடா இவள் ஒரு இடத்தில இருக்கிறாளே எண்டு . பிறகு தான் மாமி சொன்னா அவள் சாமத்தியப்பட்டிட்டாள் எண்டு. அவளுக்கு என்னில கொஞ்சமும் கோபமில்லை என்னைப் பார்த்து சிரிச்சாள். அவள் தன்ர சாமத்திய வீட்டுக்குச் சுட்ட பலகாரத்தை அதற்கு முதல் நாளே  ரகசியமா எடுத்து எனக்குத் தந்தவள். சாமத்திய வீடுகள் எனக்கு எப்போதுமே வேடிக்கையானவை பெரியக்காவின் சாமத்திய வீடுதான் முதல் நடந்த சாமத்திய வீடு அதில எடுத்த போட்டோக்களும் குதியன் குத்தும் எல்லாமுமே போதும் போதும் எண்டாகீட்டுது. அதுக்குப்பிறகு எத்தினை சாமத்தியவீடு வந்தாலும் எங்களுக்கு அதெல்லாம் பலகாரம் தின்பதற்கானதும் போட்டோவுக்குப் போஸ் கொடுப்பதற்குமான ஒரு நாள் அவ்வளவுதான். இவளுடையதும் அப்படித்தான் கழிந்து போனது………

பிறகு நிறையத் தடைவைகளில் நான் அவளோடு "கண்ணைக்கட்டி கோவம் பாம்பு வந்து கொத்தும் செத்தாலும் வரமாட்டன் செத்தவீட்டுக்கும் வராத" என்று கோபித்துக்கொண்டு விட்டு வந்திருக்கிறேன் அவளே வலிய வந்து நேசம் போடுவாள் அப்போதெல்லாம் நான் இறுமாந்திருப்பதுண்டு அவாவாத்தானே வந்து கதைச்சவா எண்டு…. ஆனால் அவள் எல்லோருடனும்  நேசத்துடனே இருக்க விரும்புகிறவளாயிருந்தாள். அவள் நேசத்திற்கு வட்டங்கள் எதுவும் கிடையாது. எங்கள்  எல்லோருடைய நேசத்துக்கும் வட்டங்கள் உண்டு. பிடித்தவை பிடிக்காதவை வரையறைகள் உண்டு. அவளிடம் கிடையாது. அவள் கோபத்தை  இலகுவில் யாரும் சம்பாதிக்க முடியாது. வெகுளித்தனமானதும் வெளிப்படையானதுமாய் இருந்தது அது.

 

2.


பிறகு கொஞ்சநாள்  கழித்து நான் கவிதையெல்லாம் எழுத ஆரம்பித்த பிறகு நான் அவளைக் குறித்து இப்படி எழுதினேன்.

பூப்பறித்தாலே
மனசு நோகிற உனக்கு
மரம் தறிக்கிற தெளிவு
யார் கொடுத்தது…..


இப்போது அவள் முந்தினமாதிரியில்லை. எல்லாம் மாறிவிட்டது அவளது பேச்சில்  ஒரு விதமான தெளிவு இருந்தது. முன்னிலும் நிதானமாக எல்லாவற்றையும் அணுகினாள். துப்பாக்கிகளைக் காதலித்தாலும் பூக்களை மறக்காதவளாயிருந்தாள். லீவில வீட்டை வரும்போதெல்லாம் அம்மம்மாவிற்கு மாலை கட்டிக்கொடுப்பாள். 

பிறகெல்லாம் அதிகம் பேசிக்கொள்வதேயில்லை எங்களிற்கும் அதற்குப்பிறகு நிறைய வேலைகள் இருந்தன. திடீரென்று ஒரு நாள் சொன்னாள் "வளந்திட்டியள் நல்லா" சைக்கிளிலேயே விழுந்து எழும்பி ஓடியநான் பிறகு மோட்சைக்கிள்ள அப்பிடியே காலுக்கவைச்ச சுத்தப்பழகியிருந்தன்.  எனக்குச் சைக்கிள் பழகிய ஞாபகங்கள் இருந்தன. முதலில் உருட்டி பிறகு கீழால காலோட்டி ஓடி யாரேனும் பிடிக்க ஓடி. எனக்கு சைக்கிள் பழக்கினது இவள்தான்.

பிடியுங்கோ பிடியுங்கோ நான் கத்திக்கொண்டேயிருப்பேன்..
நான் பிடிக்கிறன் நீ முன்னால பாத்து ஒடு
சைக்கிள் கொஞ்ச தூரம் போகும். ஆகா நல்லா ஓடுறனே என்று திரும் பார்த்தாள் அவள் இருக்கமாட்டாள் உடன விழுந்திருவன். சிரிச்சுக்கொண்டே ஓடிவருவாள். எனக்கு கோபம்கோபமாய் வரும். போடி என்று திட்டி தலைமயிரைப் பிடிச்சு உலுப்புவன் அவள் சிரித்துக்கோண்டேயிருப்பாள் நான் சைக்கிளையும் விட்டுட்டு வந்திருவன். சைக்கிளைக் கொண்டு வந்து வீட்டை விட்டுட்டு அம்மாவிடம் விளக்கங்கள் சொல்லிவிட்டு போவாள். பிறகு எத்தனை தடைவைகள் ஆக்களை வைச்சு ஓடிப்பழகோணும் என்று அவளை ஏத்தி விழுத்தி தள்ளியிருக்கிறன். அப்போதெல்லாம் கோபித்துக்கொண்டதேயில்லை.


ஆனால் இப்ப அவளைக்காணும் போதெல்லாம் ஆ வாங்கோ எப்பவந்தனியள் அவ்வளவுதான் போய்விடுவேன். பிறகொருநாள் நான் அவளைச் சந்திப்பதற்காக போயிருந்தபோது ஒரு கொட்டிலுக்குள் இருந்து பேசிக்கொண்டிருந்தோம். திடிரென்று மணிச்சத்தம் கேட்டு என்ன நினைத்தேனோ  ஜஸ்பழக்காரனை மறித்து ஜஸ்பழம் வாங்கிக் கொடுத்தேன் அவளுக்கும் அவளது தோழிகளிற்கும். அண்ணை கோண் இல்லையே நான் ஜஸ்பழக்காரரைக் கேட்டேன் அப்போது திடீரென்று அவள் சிரித்தாள். என்ணண்டு கேட்டன்? ஒண்டுமில்லை எண்டாள். ஆனால் சிரிப்பினுள்ளே நிறைய அர்த்தங்கள் இருக்கிறதோ என்று தோன்றியது. நான் வளந்திட்டன் உழைக்கிறன் அதால அவளுக்கு ஜஸ்பழம் வாங்கிக்கொடுக்கிறேன். இதன் பணப்பெறுமதிகளை விடவும் மனப்பெறுமதி முக்கியமானது. என்னதான் ஜஸ்பழம் குடிப்பதையெல்லாம் விட்டு பெரிய பெரிய கடைகளில் விரும்பின ஜஸ்கிரீம்களை விரும்பின நேரம் சாப்பிடுற மாதிரி இருந்தாலும்.  அண்டைக்கு அவள் வாங்கித் தந்த 5 ரூபாயில் சாப்பிட்ட கோண் ஜசின் ருசியிடம் எல்லாம் தோற்றுக்கொண்டே இருப்பதாய் பட்டது எனக்கு…..

எனக்கு  ஞாபமிருக்கிறது. அவளிடம் ஒரு நாள் திடீரென்று எல்லா மச்சான்களிலும் உங்களுக்கு யாரை  மிகவும் பிடிக்கும் என்று நான் கேட்டது. விஜி அண்ணா கேக்ககச் சொல்லித்தான் கேட்டதாக ஞாபகம். யாரென்று சரியாக நினைவில் இல்லை. அவள் சிரித்படியே ஏன் கேக்கிறாய் என்று கேட்டாள்?  அதற்குப்பிறகு நான் அங்கே நிற்க வில்லை ஓடிவந்துவிட்டேன். அது முந்தி பிறகு இப்ப கொஞ்சநாள் முதல் திடீரென்று எனக்கு கல்யாணம் என்றாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னதான் துப்பாக்கி ஏந்திய பெண்ணாக இருந்தாலும் அவளால் இன்னமும் கடக்க முடியாமல் இருந்த ஒரு இடம் அல்லது நபர் அவளது அப்பா நிதானமாய் இருக்கிறாரா கோபமாய் இருக்கிறாரா என்று தெரியாத அப்பா. கண்டுபிடிக்க முடியாத அப்பா? கண்டிப்பு மட்டுமே அவருக்கு தெரிந்தது. ஆனால் அவள் அந்த கண்டிப்பினிடையில் பாசம் ஒளிந்து கொண்டிருப்பதாய் நம்பினாள். எப்போதும் அவர்களது வீட்டில் ஒரு விதமான மௌனம் குடியிருந்து கொண்டேயிருக்கும். எனக்கு தோன்றியிருக்கிறது  எல்லாம் பொம்புளைப்பிள்ளையள் எண்டதாலைதான் இவ்வளவு அமைதி நிலவுகிறதோ என்று.  பிறகுதான் புரிந்தது  அவளது அப்பாவின் கோபம் தாண்டமுடியாத படியாக கடைசிவரைக்கும் இருந்தது அந்த வீட்டில். எங்கேயிருந்தாலும் கயிறுகளை அவரே வைத்திருந்தார். இப்போது அவள் தனக்கு கல்யாணம் என்கிறாள் அதுவம் தகப்பனிடம் கேட்காமலே தான் கல்யாணம் கட்டிக்கொள்வதாக முடிவெடுத்திருக்கிறாள்.

நான் ஆச்சரியமாய்க் கேட்டேன் காதலா?.... ஒரு கொஞ்ச நேர மௌனத்துக்குப்பிறகு அவள் சொன்னாள். ஓம்….
நல்லது… நீங்கள் எடுத்தது சரியான முடிவு….
எப்ப கல்யாணம்?
இல்ல சோபாக்கு நடக்கட்டும் பிறகு செய்வம்.
ஏன்?
நாங்க ரெண்டு பேரும் இரணைப்பிள்ளையள் இரண்டு பேருக்கும் ஒண்டா நடக்காட்டியும் அவளுக்கு நடந்தாப்பிறகு எனக்கு நடக்கட்டும்…

எனக்கு இப்போதும் இவள் தன்னைவிட மற்றவர்களை நேசிக்கிறாள் என்று தோன்றியது.

பிறகு சோபாக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை பார்த்து வெளிநாட்டில் கல்யாணம் முடிஞ்சு அவள் வெளிநாட்டுக்கும் போயிட்டாள். நானும்……

பிறகொரு தொலைபேசி விசாரிப்பில் பெரியம்மாவிடம் கேட்டேன் எப்ப அவளுக்கு கல்யாணம்….
வாற ஆவணி…

ஆனால்  எனக்கு ஒரு ஆனி மாத மழைநாளில். நண்பனிடமிருந்து  வந்த மின்னஞ்சல் இப்படியிருந்தது.
who is this?
கப்டன் ஈழவேணி என்று அழைக்கப்படும் தொண்டமான் நகர் கிளிநொச்சியை சொந்த முகவரியாகக் கொண்ட சபாரத்தினம் பாரதி…

நான் பதில் எழுதாமல் இங்கே தொடக்கத்தில் இருக்கும் வரிகளை எழுதத் தொடங்கியிருந்தேன்…… வெளியே அடித்துப்பெய்து கொண்டிருந்தது மழை…..

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)

 

 


மேலும் சில...
மரணத்தின் வாசனை – 01
மரணத்தின் வாசனை – 02
மரணத்தின் வாசனை – 03
மரணத்தின் வாசனை – 04
மரணத்தின் வாசனை - 05
மரணத்தின் வாசனை - 07

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 29 Mar 2024 08:18
TamilNet
HASH(0x55b10d90f008)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 29 Mar 2024 08:18


புதினம்
Fri, 29 Mar 2024 08:18
















     இதுவரை:  24715508 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4279 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com