அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 18 July 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 18 arrow சுனாமி அலைகள் ஓய...
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


சுனாமி அலைகள் ஓய...   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மு.திருநாவுக்கரசு  
Wednesday, 06 July 2005

சுனாமி அலைகளோய தீவில் இரத்தாறு
சிங்கள கட்சிகளும் பூமறாங்குகளும்.

சுனாமி

'அனைத்தும் அரசியலுக்கு கீழ்ப்பட்டவை, ஆதலால் எதனையும் அரசியலாகப் பார்க்க வேண்டும்' என்றொரு கூற்றுண்டு.

2004டிசம்பர் சுனாமி மனிதனின் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் தோன்றியது.அது தோன்றிய கணத்திலிருந்து மனிதனின் விருப்புக்களும் எண்ணங்களும் அதில் அரசியல் அலைகளாய் உருண்டெழத் தொடங்கின. அதாவது சுனாமி வெடித்த போது அது ஒரு புவியியல் பதம். ஆனால் அது வெடித்த மறுகணத்திலிருந்து அது ஓர் அரசியல் பதம். சுனாமி ஏற்படுத்திய அழிவைவிடவும் அதனால் ஏற்பட்ட படிப்பினை பெரிது. சுனாமி எழுப்பிய அலைகளின் அளவைவிடவும் மனிதன் அதன் மீது எழுப்பிய தன்சார்பு விருப்பு வெறுப்பு அலைகளின் அளவு பெரிது. சுனாமி, விருப்பு வெறுப்பின்றி தனது முரட்டுத்தனத்துடன் குழந்தைகள், கிழவர்கள், இளைஞர்கள், யுவதிகள் என்ற வேறுபாடுகள் எதுவுமின்றி இனம், மதம், மொழி என்ற வேறுபாடுகள் எதுவுமின்றி புற்பூண்டு பெருமரங்கள், பாறைகள் பிராணிகள் என்ற வேறுபாடுகள் எதுமின்றி தனது கொடிய கரங்களை ஒருகணம் விரித்து ஒடுக்கியது. அழுகுரல்களும் ஒரேமாதிரி இருந்தன. ஆனால் அதிலெழுந்த மனிதனின் விருப்பு வெறுப்பு அரசியல் அலைகள் எல்லாம் வேறு வேறு விதமாய் அமைந்தன.  

பூமி கிராமமாய் சுருங்கிவிட்டது என்று கூறுகிறோம். அது உண்மைதான். ஆனால் அது ஒரு சமச்சீர் வடிவில் சுருங்காமல் ஒரு மையத்தை நோக்கியே சுருங்கியுள்ளது. இந்த மையமும் அதுசார்ந்த இழுவிசை, எதிர்விசைகளும்தான் தற்போதய சர்வதேச அரசியலினதும் உலக அரசியலினதும் பிரச்சினைகளாகும். சுனாமியில் இந்த மையம் தெளிவாக புலப்பட்டது.

ஆசியாக்கண்டத்தில், இந்து சமுத்திரத்தின் மையத்தில் இந்தியாவுக்கு அருகே அமைந்திருக்கும் குட்டி இலங்கைத்தீவுக்கு உதவ கண்டம்விட்டுக் கண்டம், சமுத்திரம் விட்டுச் சமுத்திரம் அமெரிக்கா விரைந்து வந்தது. பூகோளம் கிராமமாகச் சுருங்கி இருப்பதன் துல்லியதமான படமிது.

பூகோள அரசியலில், இந்திய சார்பு நிலையில் வைத்து நோக்கப்படும் ஒரு சிறு புள்ளிதான்  இலங்கைத்தீவு. ஆனால் அது ஒரு முக்கிய புள்ளி. இத்தகைய சார்பு நிலையில் வைத்து இலங்கைத்தீவை நோக்கும் பூகோளத்திலுள்ள அனைத்து அரசுகளின் கண்களுக்கும் இலங்கைத்தீவு என்றும் இளமை குன்றா பதினாறு வயது நிரம்பிய 'கவர்ச்சிக் கன்னியாகத்' தோன்றுகின்றது. ஆதலால்தான் சுனாமி ஒலி கேட்டதும் அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு அரசுகளும் முண்டி அடித்துக் கொண்டு இலங்கை விரைந்தன. தன்னிலை உணர்ந்த 'கவர்ச்சிக்கன்னி' நடனமாடத் தொடங்கினாள். ஜனாதிபதி சந்திரிக்காவின் அரசியல் இராஜதந்திர அசைவுக்கு சுனாமி ஒரு புது மேடையமைத்தது. ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாய் ஆடப்பழகியிருந்த அந்தக் 'கவர்ச்சிக் கன்னிக்கு' புது மேடை புதுப் பொலிவூட்டியது.

சிங்கள அரசுக்கு சுனாமி ஒரு வரப்பிரசாதமாய் அமைந்தது. இனப்பிரச்சினை விடயத்தில் ஒரு தீர்வை எட்டமுடியாது திணறிக்கொண்டிருந்த சிங்கள் அரசிற்கு சுனாமி மூச்சுவிட ஒரு வாய்பையும் அத்துடன் கூடவே பொருளாதார ரீதியில் நகர முடியாது இறுகிப் போயிருந்த சிங்கள அரசுக்கு சுனாமி நகர ஒரு வழியையும் கொடுத்தது.

மனிதனின் வாழ்நிலையானது இந்த யுகத்தில் தலைகீழாய் புரண்டிருக்கின்றது. அத்தகைய புரழ்வின் வரிசையில் சிங்கள அரசு எப்படி சுனாமியின் வாலாக ஓர் அரசியலை நீட்டியுள்ளதென்பதை விளக்க வேண்டியது அவசியம். இதனைச் சற்று விரிவாக நோக்குவோம்.


மனிதன் தனது அங்கங்களின் நீட்டமாயும் தொடர் வளர்ச்சிக்கு ஏதுவாயும் கருவிகளையும் இயந்திரங்களையும் மற்றும் சாதனங்களையும் படைக்கலானான். அத்தகைய படைப்பே மனிதனை மற்றைய ஜீவராசிகளிடமிருந்து தெளிவாக வேறுபடுத்திச் செல்கின்றது. வாழ்நிலையில் அத்தகைய கருவிகள் மனிதனின் பகுதிகளாகவே இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக மனிதன் இயந்திரங்களினதும் கருவிகளினதும் உதிரிப்பாகமானான். உயிர்ப்புள்ள மிருங்கங்களிடமிருந்து வேறுபட்டு வளர்ந்த மனிதன் பின்பு அதற்கும் தலைகீழாய் உயிர்ப்பற்ற இயந்திரங்களுக்கும் கீழ்ப்பட்டவனானான். இவ்வாறு மனிதன் தனக்குத்தானே அந்நியனானான். தன்வாழ்வின் உள்ளடக்கத்திலிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டான். இப்படி அந்நியமாதலுக்குப் பழக்கப்பட்டுவிட்ட மனிதன் வெளவாலைப்போல தலைகீழாய்த் தொங்க பழக்கப்பட்டுவிட்டான். இவ்வாறு வாழ்வே தலைகீழ் வடிவில் இசைவாகியுள்ளது. இப்படித் தலைகீழ் வாழ்வுற்கு இசைவாகிவிட்ட மனிதன் சிறிதும் தயக்கமின்றி தன்னைச் சுனாமியின் வாலாய் நீட்டிக் கொண்டான். சுனாமியைத் தொடர்ந்து அதன் வாலாய் நீண்ட வெளிநாட்டு உதவிகள் சுனாமியைப் போலவே இலங்கையின் உள்நாட்டு, வெளிநாட்டு அரசியலில் பெரும் தாக்கம் புரியவல்ல பேரலைகளாயின. சுனாமி அலைகள் ஓயமுன்பே அவ்வலைகள் மீது ஜனாதிபதி சந்திரிக்கா ஏவிய மண்டை ஓட்டுப் பிச்சா பாத்திரங்கள் சமுத்திரங்களைக் கடந்து  மிதக்கத் தொடங்கின. அந்த மண்டை ஓட்டுப் பிச்சா பாத்திரங்களுக்குள் சில்லறைக்காசுகள் மட்டுமன்றி படைப்பட்டாளங்களும் ஏறிக்குந்திக் கொண்டன. அந்த சுனாமி அலைகள் பன்நாட்டுப் படைப்பட்டாளங்களையும் எரிபொருட் செலவின்றி இலங்கைக் கரைக்குத் தள்ளிவிட்டன.

இந்திய அரசு தனது பெரும்பாலான மக்களையும் பிச்சைக்காரர்களாகத்தான் வைத்திருக்கின்றது. குஜராத் நிலநடுக்கம் உட்பட்ட பல்வேறு இயற்கை அனர்த்தங்களின் போதெல்லாம் அது தனது பிச்சா பாத்திரங்களை வெளிநாடுகளிடம் நீட்டத் தவறவில்லை. ஆனால் 2004 சுனாமித்தாக்குதலின் போது இந்திய அரசு வெளிநாடுகளிடம் பிச்சா பாத்திரங்களை ஏற்க மறுத்தது. அதாவது இந்திய அரசிற்கு விருப்பமில்லாத பாகிஸ்தான் போன்ற நாடுகள் உட்பட பலநாடுகளிடமிருந்தும் வந்த படைகளுடன் கூடிய 'உதவிகளுக்கு' ஜனாதிபதி சந்திரிக்கா செங்கம்பளம் விரித்தார். அதன் மீது தனக்கிருந்த அதிருப்தியை வெளிக்காட்டுவ தற்காகவே இந்திய அரசு சுனாமிக்கான வெளிநாட்டு உதவிகளை மறுத்தது. குஜராத் நிலநடுக்க அழிவின் போது பாகிஸ்தானிய உதவிகளை ஏற்ற இந்திய அரசு சுனாமி அழிவின் போது வெளிநாட்டு உதவிகளை மறுத்ததன் இரகசியம் தன்னிடம் அனுமதி பெறாமலும் தன் விருப்பத்திற்கு மாறாகவும் இலங்கை வெளிநாடுகளிடம் உதவிகளைப் பெறக் கூடாது என்ற செய்தியைச் சொல்வதற்காகவேயாகும். அது உதவுபவருக்கும் உதவி பெறுபவர்களுக்குமான ஒரு பொதுச் செய்தியாகும்.

இலங்கைத்தீவை தனது ஆளுகை மண்டலத்தின் ஒரு நீட்சிப் பரப்பாக இந்தியா கருதுகிறது. அந்த நீட்சிப்பரப்பின் மீது இந்தியாவின் விருப்பத்தைமீறி யாராவது கைதொட்டால், அல்லது கால் பட்டால் அது இந்தியாவின் மூளைக்கு மின்சாரம் பாச்சியது போலாகி விடும்.

இந்தியாவுக்கு விருப்பமற்ற நாடுகளிடமிருந்தெல்லாம் இலங்கை அரசு உதவியைப் பெற்றதன் நோக்கம் புலிகளுக்கு எதிரான போரில் இந்திய அரசு முழுமையாகவும் நேரடியாகவும் உதவத் தயங்கினால் இலங்கை எத்தகைய அந்நிய நாடுகளிடமிருந்தும் எத்தகைய இராணுவ உதவிகளையும் பெறத்தயங்காது என்ற செய்தியை இந்தியாவுக்குத் தெரிவிப்பதற்காகவும் புலிகளுக்கு எதிராக மேற்குலகைத் தன்பக்கம் வளைப்பதற்குமாகும்.

சந்திரிக்கா அரசாங்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணத் தயாரில்லை என்ற கருத்தாக்கம் சர்வதேச சமூகத்திடம் நிதர்சனமாய் தோன்றிவரும் சூழலில் புலிகள் பக்கம் நியாயம் உண்டு என்ற எண்ணத்தின் பால் மேற்குலகையும், சர்வதேச சமூகத்தையும் செயற்படாது தடுப்பதற்காக இலங்கையைப் படலையில்லா வீடாக்கினார். யாரும் மடங்கட்ட இங்கு இடமிருக்கு என்ற நம்பிக்கையை  அந்நியநாடுகளுக்கு கொடுப்பதன் மூலம் தன்னிலையைப் பலப்படுத்த விரும்பினார். இத்தகைய  விவாகாரத்துக்கூடாக ஒரு புறம் தீர்வு பற்றிய நெருக்குதலைச் சர்வதேச சமூகம் தன்மீது  செய்யாமல் தவிர்க்க வழியேற்படுத்துவது, மறுபுறம் புலிகளுக்கு எதிரான மூலோபாயத்தில் இந்தியாவை தன் வியூகத்துக்குள் வீழ்ந்துவிட நிர்ப்பந்திப்பது என்பன அடங்குகின்றன. சந்திரிக்காவைப் பொறுத்தவரையில் சுனாமியை வைத்து தமிழீழப் போராட்டத்திற்கு எதிரான ஒரு களத் தயார்படுத்தலைச் செய்துமுடிக்க முனைகின்றார். இயற்கை தனது அழிப்பு வேலையை முரட்டுத்தனத்துடன் முடித்து வைத்தது. ஆனால் சிங்கள அரசோ அந்தப் பேரழிவிலிருந்து மாபெரும் அழிவுக்கு நயவஞ்சகத்தனமாய் அத்திவாரமிடுகின்றது. தான் என்ன செய்கின்றேன் என்பதைத் தெரியாமல் சுனாமி ஓர் ஊழிப்பெருநடனத்தை ஆடி முடித்தது. அந்தப்பேரழிவை பயன்படுத்தி அந்த மண்டை ஓடுகளிலும் எலும்புக் கூடுகளிலும் இராக தாள இசைக்கருவிகளை வடிவமைத்து அவற்றால் எழுப்பும் இசையின் பின்னணியில் 'கவர்ச்சிக் கன்னி' மாபெரும் அழிப்பிற்காக நர்த்தனம் ஆடத்தொடங்கியுள்ளாள்.
 
சிங்கள உயர் குழாத்தின் பிரதான அரசியல் இராஜதந்திர அணுகுமுறைகளுள் ஒன்று உள்நாட்டுப் பிரச்சினைகளை வெளிநாட்டுச் சக்திகள் மூலம் சுற்றிவளைத்துத் தோற்கடிப்பதாகும். அது சிங்களக் கட்சிகளுக்கு இடையேயான பிரச்சினையாயினும் சரி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சிங்கள சக்திகளின் கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு எதிராயினும் சரி தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை ஒடுக்குவதற்காயினும் சரி இவ்வழிமுறை வேறுபாடின்றிப் பிரயோகிக்கப்படுகின்றது.

தற்போது சந்திரிக்கா அரசாங்கத்தின் முதலாவது எதிரி யாரென்று கேட்டால் தெளிவான அர்த்தத்தில் அதற்கான பதில் மகிந்த ராஜபக்ஸ என்பதே ஆகும். இரண்டாவது எதிரி ஜே..வி.பி. மூன்றாவது எதிரி ஐ.தே.க. இவை அனைத்தையும் கையாள்வதற்கான கருவி புலி எதிர்ப்பும் அதற்கான சர்வதேச வியூகமுமாகும். அதாவது தனது எதிரிகளைத் தோற்கடிப்பதற்கும் கையாள்வதற்கும் அவர் தமிழ் மக்களைப் பலியிடத் துணிந்துள்ளார்.

ராஜபக்ஸவைப் பலவீனப்படுத்துவதற்காகவே சந்திரிக்கா ஜே.வி.பி. யுடன் கூட்டுச் சேர்ந்தார். பிரதமராயிருந்த ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கதிரையைப் பறிப்பதற்காக என்பதைவிடவும் ராஜபக்ஸவின் கைக்கு சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவம் கைமாறிவிடக் கூடாது என்பதில் சந்திரிக்கா அதிக அக்கறையாக இருந்தார். ஜே.வி.பி. யுடனான கூட்டு என்பது முதலாவது அர்த்தத்தில் ராஜபக்ஸவை தெற்கில் பலவீனப்படுத்த உதவும். தனது உடனடி எதிரியைத் தோற்கடிப்பதற்காகத் தனது நீண்ட கால எதிரியுடன் கூட்டுச் சேர்ந்தார். ஏகாதிபத்திய சக்திகள், ஐ.தே.க., புலிகள் என்போரைத் தோற்கடிக்க ஜே.வி.பி. யுடன் ஒரு 'தேச பக்த'  கூட்டு என்ற ஒரு நாடகம் அரங்கேறியது. 'ஐ.தே.க - புலிகள் கூட்டை' தோற்கடித்தல் என்ற கோஷத்தின் கீழ் சுத்த இனவாதத்தை முன்னிறுத்தி தனது திட்டங்களை சந்திரிக்கா நிறைவேற்றப் புறப்பட்டார். இனவாத அலையைக் கிளப்பி ஜே.வி.பி. யும் தனது வெற்றிகளை உறுதிப்படுத்த புறப்பட்டது. சாரம்சத்தில் தமிழின எதிர்பே இவர்களது அரசியற் சூதிற்கு மேடையானது. இத்தகைய கூட்டின் பெறுபேற்றால் ராஜபக்ஸ பலவீனப்பட்டது உண்மையாயினும் ஜே.வி.பி. பலப்பட்டு விட்டமையும் ஒரு புதிய நெருக்கடியைத் தோற்றிவிட்டது. ரணிலின் கதிரையைப் பறித்து தன்காலடியில் வைத்தவிட்டு பலவீனப்படுத்தப்பட்டுவிட்ட ராஜபக்ஸவை அக்கதிரையில் சந்திரிக்கா அமர்த்தினார்.

இப்போது தன் எதிர்சக்தியை ஒன்றுக்கொன்று முன்பின்னாய் பயன்படுத்தி அங்கிங்காய் இழுத்து ஒரு கோட்டில் அடுக்கிவிட்டு இவற்றையெல்லாம் சீர் செய்து மேற்பூச்சுப்பூச மேலும் இனவாத குழையலை அதற்கான சாந்தாக்கிக் கொண்டார். ஐ.தே.க, ஜே.வி.பி., ராஜபக்ஸ ஆகிய மூன்று எதிர் சக்திகளையும் சந்திரிக்கா நேர்நிறுத்தி அவர் தனது  இனவாதத்தால் சாந்து பூசிக்கட்டிய கட்டடமாய் அவரின் அரசாங்கம் உள்ளது. இதில் ஜே.வி.பி. தனது நேர்கணிய வளர்ச்சிக்கு களமைத்துக் கொண்டது. அனைத்து அரச வளங்களையும் வெகுஜன  ஊடகங்களையும் 'தேச பக்த' என்ற ஓர் மாஜாயால இனவாதக் கோஷத்தினுடாகப் பயன்படுத்தி  தனது வளர்ச்சியைத் தினந்தினம் உறுதிப்படுத்திக் கொள்கின்றது. இது ஓர் ஆபத்தான தீப்பந்தமேந்தும் விளையாட்டேயாயினும் ராஜபக்ஸவின் கைக்கு சு.க. வின் தலைமை கைமாறவிடாது தடுக்கும் வரை இத்தீப்பந்த விளையாட்டு சந்திரிக்காவிற்கு அவசியப் படுகின்றது.இந்த எரிபந்து விளையாட்டில் சந்திரிக்கா ஒளியைப் பெறுகிறாரேயாயினும் இதில் எதிரிகளாக்கப்பட்டிருப்பது தமிழ் மக்கள் தான். இந்த எரிபந்து விளையாட்டு ஒரு கட்டத்தில் ஜனாதிபதி மாளிகையையும், சு.க. வையும், சிங்கள தேசத்தையும் எரியூட்டிவிடும் என்ற உண்மை சந்திரிக்காவிற்குத் தெரிந்திருந்தாலும்கூட இந்த விளையாட்டிலிருந்து அவர் தன்னை விலக்கிக் கொள்ளமாட்டார்.

'ஏகாதிபத்திய எதிர்ப்பு' என்ற கோஷத்தை தேர்தலில் முன்வைத்துநின்ற சு.க. வும், ஜே.வி.பி.யும் அந்த ஏகாதிபத்தியத்துக்கு தலைமை தாங்குவதாக அவர்களால் வர்ணிக்கப்பட்ட அமெரிக்காவை விழித்து சுனாமிச் செங்கம்பள வரவேற்பளித்தனர். இவர்களை யாராவது சோஷலிசம்,ஜனநாயகம், ஏகாதிபத்தியம் என்ற தத்துவ வர்ணங்களினால் பார்ப்பார்களேயாயின் அது தவறு. இவர்களுக்கு இரு வர்ணபேதங்களே உண்டு. ஒன்று கதிரை மற்றயது கதிரையல்லாதவைகள். கதிரையை இலக்காகக் கொண்ட இத்தகைய செயல் வீரர்கள்; இறுதியில் சித்தாந்தத்தின் சொந்தக்காரர்கள் ஆவார்கள். அந்தச் சித்தாந்தமே முசோலினியின் பாஸிஸம் என்பது. இது உலகிலுள்ள எந்தொரு கடைகெட்ட இஸத்தைவிடவும்  ஆபத்தானது.

முசோலினி தொழிலாளர்களிடம் சோஷலிஸக் குரலில் பேசினார். முதலாளிகளிடம் தேசபக்த குரலில் பேசினார். வானைப் பிளந்த சோஷலிஸ, தேசபக்த இடிமுழக்கத்தின் கீழ் ஒடுக்குமுறைகளையும் ஆக்கிரமிப்புக்களையும் வெடிமருந்துடன் இணைத்துக் கொண்டார். வானளாவிய இடிமுழக்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்த மக்களின் செவிகளுக்கு தரையில் வெடித்த வெடிமருந்துகளின் சத்தங்கள் கேட்கவில்லை. ஆனால் தமது கால்களுக்குள் வெடிமருந்துகள் வெடிக்கத்தொடங்கிய போது மக்கள் கதியற்று திகைத்தனர். வானத்து இடிமுழக்கத்தின் உருமறைப்பின் கீழ் தரை சுடுகாடாகிக் கொண்டிருந்தது. அதுதான் இப்போது  சந்திரிக்கா - ஜே.வி.பி கூட்டின் கீழ் இலங்கைத்தீவிலும் நிகழ்ந்து கொண்டிருப்பது.

இனப்பிரச்சினைக்கு சமாதானத்தீர்வை எட்டுவதில்லை என்ற விருப்பார்வம் மிக்க தீர்மானத்தின் கீழ்த்தான் சந்திரிக்கா - ஜே.வி.பி யுடன் கூட்டுச் சேர்ந்தார். தீர்வு காணாதிருப்பதற்கான ஒரு சிறந்த சாக்குப்போக்காக அதனைப் பயன்படுத்தத் தீர்மானித்தார்.

மொத்தத்தில் சந்திரிக்கா மூன்று நோக்கங்களின் அடிப்படையில் ஜே.வி.பி. யைத் தன்னுடன் இணைத்துக் கொண்டார். முதலாவது அது ராஜபக்ஸவிற்கு எதிரான ஆயுதம் இரண்டாவது ஐ.தே.க. விற்கு எதிரான ஆயுதம். மூன்றாவது அது புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான ஆயுதம். சந்திரிக்காவின் கையில் ஜே.வி.பி. வாளாகவும், கேடயமாகவும், சக்கரமாகவும் உள்ளது.

 
பாபர் மசூதியை இடித்தழித்தது யார் என்று கேட்டால் அதற்கு சரியான பதில் பாரதிய ஜனதா அல்ல பிரதமராயிருந்த பி.வி. நரசிம்மராவ் என்பதே. உண்மையில் நரசிம்மராவினதும் ஏனைய கொங்கிரஸ்காரர் பலரதும் விருப்பம் பாபர் மசூதியை இடித்தழித்தவிட வேண்டும் என்பதுதான் பி.ஜே.பி. தனது உட்கட்சி அதிகாரப்போட்டியின் தேவையைப் பொறுத்து பாபர் மசூதியை இடித்தொழிக்கும் நாடகத்தில் ஈடுபட்டது. இவ்வாறு இடித்தளிக்கப்பட இருப்பதற்கான புலனாய்வு அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் பிரதமரின் கணக்கு வேறுவிதமாய் இருந்தது. இடிப்பதைத் தடுப்பதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கை எதிலும் ஈடுபடாமல் இடித்து முடியும் வரை பொறுத்திருப்பது. இடித்து முடிந்ததும் பி.ஜே.பி. மீது சேற்றைப் பூசிவிட்டு தனது எதிரிகளான பி.ஜே.பி. மீது சட்டநடவடிக்கைகளை எடுத்து தனது பிடியை மத்திய அரசிலும் உத்திரப் பிரதேச அரசிலும்; வலுவாக்கிக் கொள்வது. இறுதியில் பி.ஜே.பி. உண்மையிலேயே பலிக்கடா ஆனாது.

சந்திரிக்காவும் இந்த வழியில் ஜே.வி.பி. யை ஒரு பலிக்கடாவாக வளர்த்து வருகிறார். பஞ்சாபில் வளர்த்து வந்த அகாலிதள்ளை  வீழ்துவதற்கு இந்திரா காந்தி பிந்திரன்வாலே எனும் ஆட்டுக்குட்டியை வளர்த்தார். அந்தக்குட்டி பெரும்கடாவாக வளர்ந்து  அகாலிதள்ளை இடித்துத்தள்ளியதுடன் அதன் கொம்பு இந்திரா காந்திக்கும் குற்றவல்லதாய் ஆனது. அப்போது இந்திரா காந்தி தனது வளர்ப்புக் கடாவின் கழுத்தில் கத்திவைத்தார். இறுதியில் அந்தக் கத்தி பூமறாங்காக  (Boomerang) மாறி இந்திரா காந்தியின் கழுத்தைக்கொய்தெடுத்து. பி.ஜே.பி யைப் பலியிட்டு  மசூதியை இடித்தது போல்,ஜே.வி.பி. யைப் பலியிட்டு ராஜபக்ஸக்களையும், ரணில்களையும் இடிக்கமுடியும். அதே வேளை பிந்திரன் வாலேக்களையும் இந்திரா காந்திகளையும் வரலாறு தன் பாடப்புத்தகத்தில் பக்கம்பக்கமாய் சுமந்து வைத்திருக்கின்றது.

இவ்வடிவில் இலங்கையில் மேற்கூறியவாறு ஏறுநிரை வளர்ச்சியடைந்துவந்த தர்க்க பூர்வ நெருக்கடியின் பின்னணியில் சுனாமி சந்திரிக்காவுக்கு இளைப்பாற ஒரு மடமமைத்துக்கொடுத்தது. அத்தகைய பின்னணியில் ஜனாதிபதி சந்திரிக்காவும், வெளிவிவாகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரும் இது சுனாமி நிவாரணப்பணிக்காலம். அதன் பின்பே அரசியற் தீர்வு என்று பேசத்தொடங்கினர்.

எல்லாவற்றிக்கும் அப்பால் முரண்பாடு தனது அடுத்தகட்ட வடிவத்திற்கு ஊடாக வளர்ந்து செல்கின்றது. சுனாமியால் சந்திரிக்காவிற்கு ஏற்பட்ட தற்காலிக நிவாரணம் இன்னொரு வகையில் சந்திரிக்கா - ராஜபக்ஸ, சந்திரிக்கா - ஐ.தே.க, சந்திரிக்கா - ஜே.வி.பி முரண்பாடுகளை மிகவும் கூர்மையாக வளர்த்தெடுத்துச் செல்கின்றது.

இத்தகைய முரண்பாட்டு வளர்ச்சிப்போக்கு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு முற்றிலும் சாதகமானது.

ஜே.வி.பி. யின் நிலையில் அவர்களின் முதல் எதிரி சந்திரிக்காதான். றோகண விஜேயவீரா காலத்தில் ஜே.வி.பி. தனது முதல் எதிரியாக சந்திரிகாவின் துணைவர் விஜே குமாரதுங்காவைக் கருதி அவரைப் படுகொலை செய்தது. ஆனால் அதன் பின்பு அந்த இடத்தில் சந்திரிக்கா உள்ளார். முசோலினி தனது கணக்கை முதலில் சோஸலிஸ்டுக்களுடன்தான் தீர்த்துக்கொண்டார். சந்திரிக்கா ஒரு சோஸலிஸ்ட் இல்லையாயினும் அந்தப் பெயரில் அரைகுறையாகவேனும் களத்தில் நிற்பவர் சந்திரிக்காதான். எனவே ஜே.வி.பி. தருணம் பார்த்து தனது கணக்கை சந்திரிக்காவுடன் தீர்க்கப் புறப்படும். ஐ.தே.க. வினர் இப்படியொரு தருணத்துக்காகப் பொறுத்திருக்கின்றனர் போலத் தெரிகின்றது.

 
இத்தகைய முரண்பாட்டு வளர்ச்சிப்போக்கானது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மிகவும் சாதகமானது. இலங்கைத்தீவின் பிந்திரன்வாலேக்களாக ஜே.வி.பி. ஆகி வருவது எவராலும் தடுத்து நிறுத்த முடியாத அரசியல் யதார்த்தமாகும். பிந்திரன்வாலேக்கள் வளர்வதும் அவர்களின் கழுத்தில் கத்திவைக்கப்படுவதும் அந்தக் கத்தி பூமராங்காக மாறுவதும் இலங்கை அரசியல் கருக்கொண்டுள்ள பிழையான அரசியலின் ஓர் இறுதிக்கட்டமாகும்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 18 Jul 2024 00:51
TamilNet
HASH(0x559094c85cf8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 18 Jul 2024 00:51


புதினம்
Thu, 18 Jul 2024 00:51
     இதுவரை:  25375306 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5618 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com