அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 14 September 2024

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow நூல்நயம் arrow செப்.11: குற்றமும் தண்டனையும்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


செப்.11: குற்றமும் தண்டனையும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: எஸ்.வி. ராஜதுரை  
Tuesday, 12 July 2005

" போர்க்காலத்தில் உண்மை  என்பது பொய்கள் என்னும் மெய்க்காப்பாளனால் எப்போதும் சூழப்பட்டிருக்க  வேண்டும்"  - இரண்டாம் உலகப் போர்க்காலத்தில்  வின்ஸ்டன் சர்ச்சில் கூறிய இந்தப் 'புகழ் மிக்க'   வாசகம் அமெரிக்க அரசாலும் ஆளும் வர்க்கங்களாலும் போர்க்காலத்தில் மட்டுமின்றி அதற்கு முன்பும் பின்பும்  எப்போதும் பின்பற்றப்பட்டுவரும்   தேவவாக்கு  என்பதற்கான மற்றொரு சான்று 'செப்டம்பர் 11, 2001' பற்றிய பா.ராகவனின் நூல். சமகால வரலாறு, அரசியல்  - குறிப்பாக சர்வதேச விவகாரங்கள் - குறித்த தீவிரமான அக்கறையும் தமிழ் வாசகர்களுக்கு அவற்றை எடுத்துச்  சொல்லும்  ஆற்றலும் மிக்க இப் படைப்பிலக்கியவாதியின் கூருணர்வுகளுக்கும் கடும் உழைப்புக்கும்  கட்டியங்கூறும் இந்த நூல் தொடக்கம் முதல் இறுதிவரை ஒரே மூச்சில் படிப்பதற்குரிய பல்வேறு செய்திகளை  சுவை குன்றாது எடுத்துரைக்கிறது.

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் 'பேர்ல் ஹார்பர்' துறைமுகத்தின் மீது ஜப்பான் நடத்திய குண்டுவீச்சில் ஏற்பட்டதைவிடப் பன்மடங்கு அமெரிக்க உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் அழிவை ஏற்படுத்தியவை அமெரிக்காவிற்கே சொந்தமான நான்கு விமானங்கள்தான் என்பது ஒரு வ்ரலாற்று முரண்.  அவற்றை ஒட்டியவர்கள் வெளிநாட்டினர் என்றாலும்  அவர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட  நாட்டின் போராளிகளாக வரவில்லை. மாறாக,  மையமில்லாத அல்லது 'மையமழிந்த'ஒரு இயக்கத்தின், அதன் கருத்துநிலையின் பிரதிநிதிகளாக வந்து உலகின் மிகப் பெரும் பயங்கரவாதியான  அமெரிக்க அரசின் பொருளாதார, இராணுவ வலிமையின் சின்னங்களை அழித்தும் அசைத்தும் உயிர் நீத்தனர். அந்த இயக்கத்தின் - அல்கொய்தாவின்- தலைவரைப் பொறுத்தவரை அழிக்கப்படுபவர்கள் அப்பாவி மக்களா, அமெரிக்க இராணுவத்தினரா, சாதாரணக் குடிமக்களா என்னும் கவலையே இல்லை. இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும்  அமெரிக்க அரசு இழைத்து வரும் சொல்லொணாக் கேடுகளுக்கு எப்படியாவது முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் ஒஸாமா பின் லேடனின் ஒரே இலட்சியம்: " அமெரிக்க இராணுவ வீரர்,அஅமெரிக்க மக்கள் என்றெல்லாம் நாங்கள் பார்ப்பதாக இல்லை.அமெரிக்கனாகப் பிறந்த யாரும் எங்கள் எதிரிதான் " (ப.71-72);  " ''அமெரிக்கர்களைக் கொல்வதுதான் எங்கள் நோக்கம். அமெரிக்கர் அல்லாதோரையும் கொன்றால்தான் அமெரிக்கர்களையும் கொல்லமுடியும் என்றால் அதற்கு நாங்கள் தயாராகவே இருந்தோம். தாக்குதலில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருந்தாலும் கவலைப்படுவதற்கில்லை. அதுவும் அனுமதிக்கப்பட்டதே". ( ப.105-106) .இப்படிப்பட்டவரிடம் தர்க்க நியாயங்கள் ஏதும் உதவா   என்றாலும் அல்கொய்தா என்னும் நிகழ்ச்சிப்போக்கு உருவானதற்கான வரலாற்று நியாயங்கள் நிறைய உள்ளன. அமெரிக்கா  காரணம்; அல்கொய்தா  விளைவு  - இவற்றின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார் ராகவன்.

அல்கொய்தாவும் பின்லேடனும் செயல்படும் முறை,  அவர்களின் குறியிலக்குகள், செப்டம்பர் 11 தாக்குதலுக்குத் தீட்டப்பட்ட திட்டம், அது ஏறத்தாழ துல்லியமாக நிறைவேற்றப்பட்ட பாங்கு,   2001 ம் ஆண்டு ஆப்கன் போர், 2003 ம் ஆண்டின் ஈராக் போர், அமெரிக்க உளவு நிறுவனங்கள் செய்த தவறுகள், செப்டெம்பர் 11 தாக்குதல்கள் குறித்து புஷ் அரசாங்கம் நியமித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை ஆகியன குறித்த நம்பகமான மற்றும் அதிகாரபூர்வமான ஆவணங்களை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி , 'சர்வதேச பயங்கரவாதத்திற்கெதிராக அமெரிக்கா நடத்தும்  போர்'  பற்றி நூலாசிரியர் எழுப்பும் கேள்விகள்  (ப. 266-268) அமெரிக்காவின் அப்பட்டமான ஏகாதிபத்தியக் குறிக்கோள்களை அம்பலப்படுத்துகின்றன. விசாரணை ஆணையத்தின் முடிவுகளையும் பரிந்துரைகளையும் பகுத்தாய்வு செய்யும் அவர், அந்த ஆணையமும்கூட இஸ்லாமிய விரோத மனப்பாங்கைக் கொண்டிருப்பதையும்  அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும் போர் முயற்சிகளுக்கு அமெரிக்கப் பொதுமக்கள் ஆதரவைத் திரட்டுவதையும் சுட்டிக் காட்டுகிறார்  ( ப.269-273).      ஆனால் " புலனாய்வு அமைப்புகள் அனைத்தும் ஒரே தலைமையின் கீழ் வரவேண்டும்" என்னும் பரிந்துரை  "பயன்தரத்தக்கது" என  அவர் கூறுவதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. விசாரணைகள் நடந்துகொண்டிருந்த காலகட்டதிலேயே அந்த ஆணையத்தின் உறுப்பினர்கள் சிலர் இத்தகைய யோசனையைக் கூறியபோது  அது நடைமுறைக்கு வருமேயானால் அமெரிக்கா ஒரு போலிஸ்-அரசாக மாறிவிடும் என்று பதிலை வழங்கியவர்கள் அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் உயர் அதிகாரிகளாவர்!

ஆணையத்தின்  முடிவுகளையும் பரிந்துரைகளையும் புரிந்துகொள்ளத் தேவையானவை கீழ்க்காணும்  உண்மைகளாகும்:
ஆணையத்தின் உறுப்பினர்கள் அமெரிக்க அரசியலிலுள்ள மோதல்கள், முரண்பாடுகள் ஆகியவற்றுக்கோ அமெரிக்க சமுதாயத்திலுள்ள வர்க்கப் பிரிவினைகளுக்கோ தொடர்பற்ற நடுநிலையான மனிதர்களல்லர். அவர்களில் ஐந்து பேர் குடியரசுக் கட்சியினர். மற்ற ஐந்து பேர் ஜனநாயகக் கட்சியினர். தேசியப் பாதுகாப்பு  நிறுவனங்களில் பழுத்த அனுபவம் வாய்ந்தவர்கள். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் செனட்டர் கெர்ரீ, வியத்நாமில் அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்புப் போரில் பங்கெடுத்தவர். குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் எனப் பார்க்காது படுகொலை செய்த அவர் சென்ற ஆண்டில்தான் ஒரு போர்க்குற்றவாளி எனப் பகிரங்கமாகாக் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

ஆணையத்தின் உண்மையான குறிக்கோள்கள் கீழ்வருமாறு:
(à®…) அமெரிக்க அரசிற்கு ஒரு நம்பகத்தன்மையைக் கற்பிப்பதற்காகவும் பொதுமக்களையும் பாதிக்கப்பட்டோரின் உற்றார் உறவினர்களையும் திருப்திப்படுத்துவதற்காகவும்  செப்டெம்பர் 11 நிகழ்ச்சிகளுக்கான பின்னணி, பாதுகாப்பு ஏற்பாடுகளிலிருந்த குறைபாடுகள் பற்றிய விசாரணை நடத்துவது;
(ஆ) அரசு யந்திரத்தின் முக்கிய உறுப்புகளான பென்டகன், உளவுத் துறைகள், அமெரிக்க அதிபரின் அதிகாரம்  கியனவற்றுக்குப் பெரும் சேதமோ இழுக்கோ வராமல் தடுப்பது;                                                  (இ) அரசு யந்திரத்தை வலுப்படுத்தவும்  அமெரிக்காவின் இராணுவவாதத்தை வெளிநாடுகளில் மேலும் ஆக்கிரமிப்புத்தன்மை வாய்ந்த வகையில் பிரயோகிக்கவும் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை என்னும் பெயரால் உள்நாட்டில் மனித உரிமைகளை நசுக்கவும் விசாரணை ணையத்தின் முடிவுகளைப் பயன்படுத்துவது.

விசாரணையின்போது வெளிப்பட்ட சில முக்கிய உண்மைகளை இந்த ஆணையம் அறவே புறக்கணித்துவிட்டது. முதலாவதாக, பயஙகரவாதத்தை முறியடிக்க புஷ்ஷால் நியமிக்கப்பட்டிருந்த உயர் அதிகாரி  ரிச்சர்ட் கிளார்க் ஈராக் மீது போர் தொடுப்பதற்கு செப்டெம்பர் 11 நிகழ்ச்சியை புஷ் அரசாங்கம் ஒரு முகாந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டது என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியபோது விசாரணை ஆணையத்தின் துணைத் தலைவர்  லீ ஹாமில்ட்டன் ஆணவத்துடன் அந்தக் குற்றச்சாட்டை உதாசீனம் செய்தார். அந்த ஆணையம் ஈராக் போரைப் பற்றி விசாரணை செய்ய அமைக்கப்பட்டது அல்ல என்றார். புஷ் அரசாங்கத்தின் உயர் மட்டத்திலிருந்த ரம்ஸ்பெல்ட், கண்டலீஸாரைஸ் ஆகியோருக்கு மட்டுமின்றி அல்கொய்தா நடவடிக்கைகளைக் கண்காணிக்கும்  பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்த துணை அதிபர் டிக் செனிக்கும் அமெரிக்க மண்ணிலேயே அல்கொய்தா தாக்குதல் நடத்தும் என்னும் தகவல் தெரிந்திருக்கத்தான் செய்தது.' பின் லேடன் அமெரிக்காவிற்குள்ளேயே தாக்குதல் நடத்த உறுதிபூண்டுள்ளார்' என்னும் தலைப்பின் கீழ் அமெரிக்க அதிபர் புஷ்ஷிடம் சி.ஐ.ஏ, ஒவ்வொரு நாளும் தகவல் அளித்து வந்தது. டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள தனது பண்ணையில் புஷ் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தபோது,  ஆகஸ்ட் 6, 2001 அன்று சி.ஐ.ஏ. கொடுத்த அறிக்கையில் வாஷிங்டன், நியுயார்க் ஆகிய நகரங்களில் அல்கொய்தா தாக்குதல் தொடுக்கும் அபாயம் மட்டுமின்றி விமானங்கள் கடத்தப்படும் அபாயம் இருப்பதாகவும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அதற்குப் பிறகுதான் , சில மாதங்களுக்கு முன் கடுமையாக்கப் பட்டிருந்த நாடு தழுவிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்த்தப்பட்டன. சி,ஐ.ஏ., எ·ப்.பி.ஐ.போன்ற உளவு அமைப்புகள் முக்கிய விஷயங்கள் சிலவற்றில் கோட்டை விட்டு விட்டது பற்றி விரிவாக விசாரணை நடத்திய ஆணையம்  எழுப்பியிருக்க வேண்டிய ஆனால்  அதனால்  எழுப்ப முடியாத கேள்வி இதுதான்: " அசாதாரண முறையில் புஷ் அரசாங்கம் அஜாக்கிரதையாக இருந்தது திட்ட்மிட்ட வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குறைத்து, தாக்குதல் நடைபெறுவதை அனுமதித்து, பின்னர் தாக்குதலை ஈராக்குடன் தொடர்புபடுத்தி அதன் மீது படையெடுத்து எண்ணெய் வளங்களைக்  கைப்பற்றுவதற்காகவா?"

அமெரிக்க இராணுவ, பொருளாதார ஆதிக்க நோக்கங்களைப் பொருத்தவரை இரு கட்சிகளுக்குமிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லையாதலால் விசாரணை ஆணையத்தின்  பரிந்துரைகள் சாராம்சத்தில்  ஒரு போலிஸ்- அரசைக் கட்டுவதற்கான நாசூக்கான முயற்சிகளாகவே காட்சியளிக்கின்றன. அந்த முயற்சிகளுக்கு வலுச்சேர்ப்பவையாக இருப்பவை ஜார்ஜ் புஷ்ஷின் அணியிலுள்ள கிறிஸ்துவ மத அடிப்படைவாதிகளின் செல்வாக்கு.

இக்கருத்துகளுடன் உடன்படுவதில் பா.ராகவனுக்குத் தடை ஏதும் இருக்காது என நம்பலாம். தமிழ்பேசும் உலகில் பதிப்புக்கலை அடைந்துள்ள முதிர்ச்சிக்கு இந்த நூல் அருமையான எடுத்துக்காட்டு. பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி நூலாசிரியரைப் போலவே நமது பாராட்டுக்குரியவர்.

 

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)

 

 



 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 14 Sep 2024 09:27
TamilNet
Even though I first met Viraj Mendis in Geneva, his reputation as a fearless advocate for Tamil liberation preceded him. The movement respected Viraj, and many of our leaders in the diaspora and the homeland sought his clarity and insight. I consider myself fortunate to have worked with him and learned from him.
Sri Lanka: Viraj exposed West?s criminalization of Tamil struggle


BBC: உலகச் செய்திகள்
Sat, 14 Sep 2024 09:19


புதினம்
Sat, 14 Sep 2024 09:20
















     இதுவரை:  25659258 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 7186 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com